குளித்தலை அருகே சாலையோர கடையில் கம்மங்கூழ் அருந்திய கலெக்டர்

குளித்தலை அருகே சாலையோர கடையில் கம்மங்கூழ் வாங்கி மாவட்ட கலெக்டர் அருந்தினார்.
குளித்தலை அருகே சாலையோர கடையில் கம்மங்கூழ் அருந்திய கலெக்டர்
Published on

கரூர்,

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்திற்குட்பட்ட ராச்சாண்டார் திருமலை ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட நிறைவு நாள் விழா நடந்தது. இதில் பங்கேற்ற மாவட்ட கலெக்டர் அன்பழகன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் காரில் கலெக்டர் கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். வரும் வழியில் தோகைமலை சாலையில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது போக்குவரத்தினை சீர் செய்யும் பணியில், பெண் போலீஸ் ராதிகா ஈடுபட்டிருந்தார். இதைக் கண்ட கலெக்டர் உடனடியாக காரினை நிறுத்திவிட்டு, வெயிலிலும் சோர்ந்து போகாமல் பணியில் கண்ணும் கருத்துமாக இருந்த ராதிகாவுக்கு வாழ்த்து கூறி அவரை பாராட்டினார்.

மேலும், அங்கேயே சாலை ஓரத்தில் கம்மங்கூழ் விற்ற தள்ளுவண்டி கடைக்குச் சென்ற மாவட்ட கலெக்டர், அந்தக்காவலருக்கும், அருகில் இருந்த முதியவருக்கும் கம்மங்கூழை வாங்கிக்கொடுத்து, தானும் அருந்தினார். தன்னலம் கருதாது, மக்களுக்காக வெயில், மழை, இரவு, பகல் பாராமல் உழைப்பவர்கள் காவல் துறையினர். அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய தங்களை மனதாரப் பாராட்டுகின்றேன். தொடர்ந்து கவனத்துடனும், நேர்மையுடன் பணியாற்றி வாழ்வில் சிறப்பான இடத்தினை நீங்கள் அடைவீர்கள் என கூறிவிட்டு காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

அப்போது குளித்தலை கோட்டாட்சியர் எம்.லியாகத் உடனிருந்தார். சாலையோர தள்ளுவண்டி கடையில் மாவட்ட கலெக்டர் கம்மங்கூழ் அருந்தியதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com