தனியார் பஸ்சில் கூடுதல் கட்டணம் வசூலித்த கண்டக்டர் சிக்கினார்

சேலத்தில் இருந்து வேலூருக்கு செல்ல இருந்த தனியார் பஸ்சில் கூடுதல் கட்டணம் வசூலித்த கண்டக்டர் சிக்கினார்.
தனியார் பஸ்சில் கூடுதல் கட்டணம் வசூலித்த கண்டக்டர் சிக்கினார்
Published on

சேலம்,

அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் இதர தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் பஸ்சை இயக்காமலும் இருந்து வருகிறார்கள். இதனால், தனியார் பஸ் உரிமையாளர்கள் கூடுதல் பஸ்களை இயக்குவதோடு, கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதாகவும் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் சேலம் புதிய பஸ் நிலையத்தில் கலெக்டர் ரோகிணி மற்றும் சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கடேசன், செந்தில் மற்றும் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர் புறப்பட்டு சென்ற தனியார் பஸ்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாகவும் சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வேலூருக்கு தனியார் பஸ் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அந்த பஸ்சில் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் ஏறி இருந்தனர்.

பஸ்சில் வாணியம்பாடியை சேர்ந்த திருப்பதி கண்டக்டராகவும், வேலூரை சேர்ந்த தினேஷ் டிரைவராகவும் இருந்தனர். கண்டக்டர் திருப்பதி, பஸ்சில் பாதிக்கும் மேற்பட்ட பயணிகளுக்கு டிக்கெட் வழங்கி விட்டார். அந்த பஸ்சில் அதிகாரிகள் குழுவினர் ஏறி, பயணிகளிடம் டிக்கெட்டை வாங்கி பரிசோதனை நடத்தினர். அப்போது சேலத்தில் இருந்து வேலூருக்கு பயண கட்டணம் ரூ.123-க்கு பதில் ரூ.200-ம், திருப்பத்தூருக்கு ரூ.72-க்கு பதில் ரூ.100 எனவும் கூடுதல் கட்டணம் வசூலித்தது கண்டறியப்பட்டது.

அதைத்தொடர்ந்து பஸ்சின் கண்டக்டர் திருப்பதியை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது திருப்பதி, பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததை ஒப்புக்கொண்டார். மேலும் சம்பந்தப்பட்ட பஸ்சின் உரிமையாளர் வேலூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. பின்னர் பயணிகளிடம் கூடுதலாக வசூலித்த தொகையை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலித்தது தொடர்பாக வேலூர் மாவட்ட கலெக்டரின் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்திருப்பதாக வட்டார போக்கு வரத்து அலுவலர் தாமோதரன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com