நத்தம் அருகே இருதரப்பினரிடையே மோதல், பெண்கள் உள்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு

நத்தம் அருகே இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் பெண்கள் உள்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதை கண்டித்து ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதித்தது.
நத்தம் அருகே இருதரப்பினரிடையே மோதல், பெண்கள் உள்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு
Published on

நத்தம்,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள வத்திப்பட்டி கிராமத்தில் முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் இரவு இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். அப்போது கம்பு, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங் களால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில் ஒரு தரப்பை சேர்ந்த இந்திரா (வயது 40), திலகவதி (23), சூர்யா (20) உள்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

இதில் இந்திரா, திலகவதி, சூர்யா ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனையிலும், மற்ற 3 பேர் நத்தம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஒரு தரப்பினர் நத்தம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (24), டேவிட் (24) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் தங்களை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி ஒரு தரப்பினர் நத்தம்-மதுரை சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நத்தம் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தாக்கிய நபர்களை கைது செய்வதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காத வண்ணம் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com