வீடுகள் கட்டியதால் 10 ஏக்கராக குறுகி விட்டது ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ஏரியை மீட்க வேண்டும்

செம்பாக்கம் நகராட்சி பகுதியில் உள்ள ராஜகீழ்ப்பாக்கம் ஏரியை ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து மீட்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீடுகள் கட்டியதால் 10 ஏக்கராக குறுகி விட்டது ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ஏரியை மீட்க வேண்டும்
Published on

தாம்பரம்,

சென்னை புறநகர் பகுதிகளில் ஏரிகள் மற்றும் நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால் மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

சிட்லபாக்கம் ஏரியில் கட்டப்பட்ட வணிக கட்டிடங்கள் அதிரடியாக இடித்து அகற்றப்பட்டது. இதே போல் கோவிலம்பாக்கம், நன்மங்கலம், ஆதனூர், ஊரப்பாக்கம் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டு தலங்கள் மற்றும் வீடுகளையும் அகற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக வருவாய் துறையினர் தெரிவித்தனர்.

முடிச்சூர் சாலை பகுதியில் பீர்க்கன்காரணை ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 175 வீடுகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செம்பாக்கம் நகராட்சி பகுதியில் உள்ள ராஜகீழ்ப்பாக்கம் ஏரி 105 ஏக்கர் பரப்பளவு இருந்தது. பல்வேறு தரப்பினரின் ஆக்கிரமிப்பால் தற்போது இந்த ஏரி 10 ஏக்கர் அளவிற்கு குறுகி விட்டது. இதனால் ஏரியில் தண்ணீர் தேங்க வழி இல்லாததால் சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது

கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது இந்த ஏரியில் கரை ஆக்கிரமிப்புகள் மட்டும் அகற்றப்பட்டு ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. அதன் பின்பும் இந்த ஏரியை ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து மீட்க முடியவில்லை.

அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 1,400 வீடுகளை அகற்றும்படி 2 வருடத்திற்கு முன்பே அவற்றின் உரிமையாளர்களுக்கு வருவாய்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினார்கள். ஆனாலும் ஏரியில் ஆக்கிரமிப்பு இன்னும் தொடர் கதையாக உள்ளது.

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஆர்வம் காட்டும் காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் ராஜகீழ்ப்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தயக்கம் காட்டுவது ஏன் என புரியவில்லை என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்

ஏரியில் வீடு கட்டி உள்ளவர்களுக்கு மாற்று இடம் வழங்கி உடனடியாக ராஜகீழ்ப்பாக்கம் ஏரியை காப்பாற்ற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்னும் சில ஆண்டுகள் இந்த ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இதே நிலை நீடித்தால் அந்த ஏரியை வரைபடத்தில் மட்டுமே பார்க்க முடியும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.

எனவே விரைந்து செயல்பட்டு ராஜகீழ்ப்பாக்கம் ஏரியை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com