அரசு பஸ்சில் பயணம் செய்த கடலூர் கலெக்டர் மனுநீதிநாள் முகாமுக்கு அதிகாரிகளுடன் சென்றார்

பண்ருட்டி அருகேயுள்ள பைத்தாம்பாடியில் நேற்று நடந்த மனுநீதிநாள் முகாமுக்கு கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே அதிகாரிகளுடன் அரசு பஸ்சில் சென்றார்.
அரசு பஸ்சில் பயணம் செய்த கடலூர் கலெக்டர் மனுநீதிநாள் முகாமுக்கு அதிகாரிகளுடன் சென்றார்
Published on

கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே கடந்த நவம்பர் மாதம் 30-ந்தேதி ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கொழை கிராமத்தில் நடந்த மனுநீதிநாள் முகாமுக்கு அரசு பஸ்சில் சென்று வந்தார். அதேப்போல் பண்ருட்டி தாலுகா பைத்தாம்பாடி ஊராட்சியில் நேற்று நடந்த மனுநீதிநாள் முகாம் மற்றும் சிறப்பு கிராமசபை கூட்டத்துக்கும் அரசு பஸ்சில் சென்று வந்தார்.

இந்த முகாமுக்கு வரும் அனைத்து துறை அலுவலர்களும் கடலூரில் உள்ள கலெக்டர் முகாம் அலுவலகத்துக்கு காலையில் வந்து விட வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அனைத்து துறை அதிகாரிகளும் கலெக்டர் முகாம் அலுவலகத்துக்கு வந்திருந்தனர்.

தொடர்ந்து அங்கு தயாராக நிறுத்தப்பட்டிருந்த அரசு பஸ்சில் முதலாவதாக கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே ஏறி முன்பக்க இருக்கையில் அமர்ந்தார். அவரைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அதிகாரியும் மற்ற அதிகாரிகளும் பஸ்சில் ஏறினார்கள். இதன்பிறகு பஸ் பைத்தாம்பாடிக்கு புறப்பட்டுச்சென்றது.

பைத்தாம்பாடியை சென்றடைந்ததும் பஸ்சில் இருந்து கலெக்டரும் அதிகாரிகளும் கீழே இறங்கி மனுநீதிநாள் முகாமுக்கு சென்றனர். தொடர்ந்து கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. முன்னிலையில் மனுநீதிநாள் முகாம் மற்றும் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.

மனுநீதி நாள் முகாமில் 780 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிரசாந்த்.மு.வடநேரே வழங்கி பேசினார்.

முகாமில் மாவட்ட வருவாய் அதிகாரி கோ.விஜயா மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடக்கமாக சப்-கலெக்டர் தினேஷ் வரவேற்று பேசினார். முடிவில் பண்ருட்டி தாசில்தார் விஜய் ஆனந்த் நன்றி கூறினார். முகாம் முடிவடைந்ததும் அதே பஸ்சில் கலெக்டரும் அதிகாரிகளும் கடலூருக்கு திரும்பி வந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com