கடைகளை திறப்பதற்கான விதிமுறைகளை மாற்றி அமைக்க முடிவு முதல்-அமைச்சர் நாராயணசாமி தகவல்

புதுவையில் கடைகளை திறப்பதற்கான விதிமுறைகளை மாற்றி அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கடைகளை திறப்பதற்கான விதிமுறைகளை மாற்றி அமைக்க முடிவு முதல்-அமைச்சர் நாராயணசாமி தகவல்
Published on

புதுச்சேரி,

புதுவை எல்லைப் பகுதிகளில் நான் ஆய்வு மேற்கொண்டேன். அப்போது, கோரிமேடு சோதனை சாவடியில் விழுப்புரம் மாவட்ட பகுதிகளில் இருந்து நிறைய வாகனங்கள் வந்தன. அங்கு மருத்துவக் குழுவினர் பணியில் உள்ளனர். மருத்துவம் தவிர வேறு பணிகளுக்கு வருபவர்களை அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளேன்.

காலை வேளைகளில் தெருக்களில் அதிக அளவு கூட்டம் உள்ளது. மக்கள் கூட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் வைரஸ் தொற்று பாதிப்பு ஏதுமில்லை. ஏனாமில் தொழிலாளர்களை அனுமதிக்காதது தொடர்பாக மத்திய அமைச்சரவை செயலாளரிடம் நான் பேசினேன். அதைத்தொடர்ந்து நாடு முழுவதற்கும் புதிய உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனது கோரிக்கையை ஏற்று உத்தரவிட்ட மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

கடைகள் திறப்பு

இதேபோல் வெளிநாடுகளில் வசிக்கும் நம் மாநிலத்தவர் புதுவை திரும்ப விருப்பம் தெரிவித்தால் அது குறித்த விவரங்களை சேகரித்து மத்திய அரசுக்கு அனுப்பி, அவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசின் உத்தரவுப்படி தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த தொழிற்சாலைகளில் புதுவை மாநிலத்தை சேர்ந்தவர்கள் பணி செய்யலாம். ஆனால் தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு பணி செய்ய அனுமதி இல்லை. புதுவையை சேர்ந்தவர்களும் நீண்ட தூரம் செல்லாமல் தொழிற்சாலை அருகிலேயே தங்கியிருந்து பணி செய்ய வேண்டும். இதேபோல் கடைகளை திறக்க அனுமதி வழங்குவது தொடர்பாக கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதில் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் வர்த்தக அமைப்பினர் என்னை சந்தித்து பேசினார்கள். புதுவையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளதால் அவர்களுக்கு அனுமதி பெற காலதாமதமாகும் என்று தெரிவித்தனர்

விதிமுறைகள்...

நகராட்சியிடம் உரிமம் பெற்று தொழில் செய்வோர் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும். பின்னர் அதிகாரிகள் சோதனை நடத்தி மத்திய அரசின் வழிமுறைகள் பின்பற்றப்பட்டு உள்ளதா? என்பதை ஆய்வு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர். எனவே காலதாமதம் ஏற்படாமல் கடைகளை திறக்க விதிமுறைகளை மாற்றி அமைக்க கூறி உள்ளேன்.

நமது மாநில மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும், அதே நேரத்தில் பொருளாதாரமும் வளர வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் உரிய நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com