கூட்டுறவு தேர்தலுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு

குலசேகரம்-குளச்சல் பகுதிகளில் கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட தாமதமானதை கண்டித்து போராட்டம் நடத்தியவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டுறவு தேர்தலுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு
Published on

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் அடுத்த மாதம் ( ஏப்ரல்) 2-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் நடந்தது.

அதைத்தொடர்ந்து நேற்று வேட்புமனுக்கள் பரிசீலனை நடந்தது. கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதால் குலசேகரம் மற்றும் குளச்சல் பகுதிகளில் போராட்டம் நடந்தது.

குளச்சல் லெட்சுமிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தேர்தலில் 23 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர். வேட்பு மனு பரிசீலனை முடிந்த பிறகும், மாலை 5 மணிக்கு இறுதி பட்டியல் வெளியிடப்படவில்லை.

இதை கண்டித்து லெட்சுமிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் உள்ளே வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வேட்பாளர்கள் இறுதி பட்டியல் 6 மணிக்கு அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

குலசேகரத்தில் உள்ள குலசேகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திலும் வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிட தாமதமானது. இதை கண்டித்து வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதற்கு தற்போதைய தலைவரும், வேட்பாளருமான மோகன்தாஸ் தலைமை தாங்கினார். இதில் திருவட்டார் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் காஸ்டன் கிளிட்டஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் குலசேகரம் பகுதி செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதே போல் பேச்சிப்பாறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் முன்பும் முற்றுகை போராட்டம் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி நடராஜன், தி.மு.க.வை சேர்ந்த முத்துராஜ், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com