காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தாக்கப்பட்டதை கண்டித்து தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Published on

தஞ்சாவூர்,

காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவருமான மணியரசன் கடந்த 10-ந்தேதி இரவு தஞ்சை கலைஞர் நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து சென்னைக்கு ரெயிலில் செல்வதற்காக மோட்டார்சைக்கிளில் புறப்பட்டு சென்றார். மோட்டார்சைக்கிளை சீனிவாசன் என்பவர் ஓட்டிவர, மணியரசன் பின்னால் அமர்ந்து வந்தார்.

தஞ்சை நட்சத்திரநகர் அருகே வந்த போது பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர், மணியரசனை தாக்கி, அவர் வைத்திருந்த பையை பிடுங்கிசென்று விட்டனர். இதில் காயம் அடைந்த மணியரசன் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக குற்றவாளிகளை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் மணியரசன் மீது தாக்குல் நடத்தியதை கண்டித்து தஞ்சை ரெயில் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்தேசிய பேரியக்க மாவட்ட செயலாளர் வைகறை தலைமை தாங்கினார். தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அயனாவரம் முருகேசன், தாளாண்மை உழவர் இயக்க ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு, ஐ.ஜே.கே. மாவட்ட செயலாளர் சிமியோன் சேவியர்ராஜ், டாக்டர் பாரதிசெல்வன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மணிமொழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மணியரசனை தாக்கிய உண்மை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் காவிரி டெல்டா விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன், மக்கள் விடுதலை கட்சியை சேர்ந்த அருணாசலம், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், ஏ.ஐ.டி.யூ.சி. போக்குவரத்துக்கழக கோட்ட செயலாளர் துரை.மதிவாணன், ஒய்வு பெற்றோர் சங்க செயலாளர் அப்பாதுரை, சிந்துநகர் குடியிருப்போர் சங்க தலைவர் ஜெயக்குமார், தமிழர்தேசிய பேரியக்கத்தை சேர்ந்த பழ.ராஜேந்திரன், ராசுமுனியாண்டி மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com