சர்வாதிகார போக்கால் காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகிறது எடியூரப்பா பேச்சு

சர்வாதிகார போக்கால் காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகிறது என்று எடியூரப்பா கூறினார்.
சர்வாதிகார போக்கால் காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகிறது எடியூரப்பா பேச்சு
Published on

பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா சார்பில் 1975-ம் ஆண்டு நெருக்கடி நிலை ஒரு கருப்பு தினம் என்ற பெயரில் நிகழ்ச்சி பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

அரசியல் சாசனம் 352-வது பிரிவை தவறாக பயன்படுத்தி இந்திரா காந்தி, நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். இதன் காரணமாக தான் காங்கிரஸ் கடந்த 2 நாடாளுமன்ற தேர்தலிலும் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியவில்லை. நாட்டை நீண்ட காலம் ஆண்ட காங்கிரஸ் இன்று தனது அங்கீகாரத்தை இழக்கும் பீதியில் உள்ளது. அந்த கட்சியில் இருந்தால் எதிர்காலம் இல்லை என்ற மனநிலை அதன் நிர்வாகிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

நெருக்கடி நிலைக்கு எதிராக போராடிய ஜெயப்பிரகாஷ் நாராயணை உயிரோடு கொன்றனர். மேலும் வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை சிறையில் அடைத்தனர். நெருக்கடி நிலையின்போது, போலீஸ் அதிகாரிகள் மூலம் பல்வேறு தலைவர்களுக்கு தொல்லை கொடுத்தனர். நெருக்கடி நிலைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். தீவிரமாக போராடி வெற்றி கண்டது. சர்வாதிகார போக்கால் காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகிறது.

நாட்டுக்கு சுதந்திரம் வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக இருந்தது. இதற்காக பல தலைவர்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். பா.ஜனதா ஆட்சி அமைந்தால் நெருக்கடி நிலைக்கு எதிராக போராடியவர்களுக்கு ஓய்வூதியம், மருத்துவ வசதிகள் உள்பட பல்வேறு வசதிகளை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும். இந்த தகவல் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com