மு.க.ஸ்டாலின் கனவு ஒருபோதும் நிறைவேறாது: “மத்தியில் தாமரை மலர்ந்தே தீரும்” தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு

“மு.க.ஸ்டாலின் கனவு ஒருபோதும் நிறைவேறாது. மத்தியில் தாமரை மலர்ந்தே தீரும்” என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
மு.க.ஸ்டாலின் கனவு ஒருபோதும் நிறைவேறாது: “மத்தியில் தாமரை மலர்ந்தே தீரும்” தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
Published on

ஓட்டப்பிடாரம்,

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் ராஜம்மாள் நகரில் பா.ஜனதா சார்பில் சொந்தமுடன் ஓர் இனிய சந்திப்பு என்ற நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் சந்தனகுமார் வரவேற்றார். பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு, புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:- தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஊழல்வாதி ஒருவரை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக தான் கட்சி என்னை இங்கு போட்டியிட அனுப்பியது. கனிமொழி ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக, தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்த பெரியார் படத்தை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக பனை மரத்தை வைத்து உள்ளார். அவர் தூத்துக்குடி மக்களை ஏமாற்ற முடியும் என்று நினைத்துவிட்டார். இந்த மண் ஆன்மிக மண். அவர்களை ஏற்றுக்கொள்ளாது.

மத்தியில் தாமரை மலர்ந்தே தீரும். மு.க.ஸ்டாலின் கனவு ஒருபோதும் நிறைவேறாது. தூத்துக்குடி மக்கள் வாய்ப்பு கொடுத்தால் தூத்துக்குடி விஞ்ஞானபூர்வமாக வளர்ச்சி அடைய பல திட்டங்களை கொண்டு வருவேன். வாக்குக்கு பணம் கொடுப்பதை இந்த தேர்தலுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். குடும்பம் குடும்பமாக கொள்ளை அடிக்க வருவார்கள். தூத்துக்குடியை கொள்ளை அடிக்க வருவார்கள். மக்கள் எழுச்சியுடள் இருக்க வேண்டும். ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட பொதுச்செயலாளர் சிவராமன், ஒன்றிய பொறுப்பாளர் முத்தமிழ்செல்வன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com