மத்திய அரசு ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்க முயற்சிக்கிறது குமாரசாமி குற்றச்சாட்டு

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்க முயற்சிக்கிறது என்று ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி குற்றம்சாட்டினார்.
மத்திய அரசு ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்க முயற்சிக்கிறது குமாரசாமி குற்றச்சாட்டு
Published on

பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்க முயற்சிக்கிறது. கவர்னர் வஜூபாய் வாலா எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்தது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது ஆகும். மேலும் எடியூரப்பா மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்து உள்ளார். இது எதற்கு? வியாபாரத்திற்கா?

மத்திய அரசு வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது. எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை மிரட்டுவதற்காக அமலாக்கத் துறையை பயன்படுத்துகிறது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆனந்த்சிங் எம்.எல்.ஏ.வை அந்த கட்சியால் தொடர்பு கொள்ள முடியவில்லை. நான் ஆனந்த் சிங்கிடம் பேசவில்லை. ஆனந்த் சிங், காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவரை தொடர்பு கொண்டு பேசி அவருடைய பிரச்சினைகளை சொல்லி இருக்கிறார். அதாவது அவரை அமலாக்கத்துறை மிரட்டி வருகிறது என்றும் இதுபற்றி என்னிடம் தகவல் தெரிவிக்கும்படியும் கூறி இருக்கிறார்.

நாட்டின் நலன் கருதி பா.ஜனதா அல்லாத மற்ற கட்சிகள் இந்த நேரத்தில் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். அனைத்து மாநில கட்சிகளின் தலைவர்கள், முதல்-மந்திரிகள், மாநில தலைவர்கள் அனைவரையும் பா.ஜனதாவுக்கு எதிராக ஒருங்கிணைக்க வேண்டும் என்று என் தந்தையாரை(முன்னாள் பிரதமர் தேவேகவுடா) இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

பா.ஜனதா தவிர மற்ற அனைத்து கட்சிகளும் தங்களுக்கு இடையே உள்ள மற்ற கருத்துவேறுபாடுகளை மறந்து இந்த பிரச்சினையில் ஒன்றாக போராட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com