பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா

பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா
Published on

பழனி

தமிழ்க் கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனி திருத்தலத்தில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை போன்ற பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. இதில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் கொண்டாடப்படும் வைகாசி விசாக திருவிழா வசந்த உற்சவம் என்று வர்ணிக்கப்படுகிறது.

இதையொட்டி இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக நேற்று காலை முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானைக்கு பெரியநாயகி அம்மன் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு பூஜைகளும், 16 வகை அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடந்தது.

பின்னர் சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி உட்பிரகாரம் சுற்றிவந்து, கொடிக்கட்டு மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு விநாயகர் பூஜை, கொடிமரம் கொடிபட பூஜை, பாத்திய பூஜைகள் நடைபெற்றது, காலை 10.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து முத்துக்குமாரசாமி வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜை நிகழ்ச்சிகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம், சுந்தரமூர்த்தி, சிவம், சந்திரமவுலி மற்றும் குருக்கள்கள் செய்தனர்.

10 நாட்கள் கொண்டாடப்படும் வைகாசி விசாக திருவிழாவில் தினசரி காலை தந்த பல்லக்கிலும், மாலை 8 மணிக்கு மேல் தங்கமயில், வெள்ளி காமதேனு, கற்பக விருட்சம், வெள்ளி யானை, வெள்ளி காமதேனு, தங்க குதிரை, பெரிய தங்க மயில் வாகனம் போன்றவற்றில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானையுடன் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவில் 6-ம் நாளான 27-ந் தேதி முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

7-ம் திருநாளான 28-ந் தேரோட்டம் நடக்கிறது. இந்த திருவிழாவையொட்டி 10 நாட்களும் பெரியநாயகி அம்மன் கோவிலில் தினசரி மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தி சொற்பொழிவு, பக்தி இன்னிசை, கலை நிகழ்ச்சிகள், பரத நாட்டியம், வீணை கச்சேரி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

கொடியேற்றம் நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம் மற்றும் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com