மதுரகாளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா ரதங்களில் மலர்களை எடுத்து வந்து வழிபட்டனர்

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் 53 ரதங்களில் மலர்களை எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர்.
மதுரகாளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா ரதங்களில் மலர்களை எடுத்து வந்து வழிபட்டனர்
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூரில் அமைந்துள்ள ஆதிசங்கரர் வழிபட்ட பெருமைபெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பூச்சொரிதல் விழா நேற்று இரவு தொடங்கி விடிய விடிய நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மூலவர் அபிஷேகமும், மதியம் உச்சிகால பூஜையும், இரவு 10 மணிக்கு கோவில் நடையில் இருந்து ஊர் பொதுமக்களுடன் பூ கொண்டு வருதல் நிகழ்ச்சி நடந்தது. இதனைத்தொடர்ந்து பூச்சொரிதல் விழாநேற்று காலை 10 மணி வரை நடந்தது. மாவட்ட கலெக்டர் சாந்தா பூச்சொரிதல் விழாவை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

53 ரதங்களில் வண்ண மலர்கள் அம்மனுக்கு அர்ச்சனைக்காக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. பின்பு ரதங்களில் பக்தர்கள் கொண்டு வந்த மலர்களால் அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு வந்த மலர் ரதங்களின் எண்ணிக்கை 47 ஆகும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 6 மலர் ரதங்கள் அதிகமாக வந்தடைந்தன. உள்ளூர் பக்தர்களின் மலர் ரதம் கோவிலை முதலில் வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து டிராக்டர்களில் அம்மனின் சிலைக்கு அலங் காரம் செய்யப்பட்ட மலர் ரதங்கள் விடிய விடிய கோவிலை வந்தடைந்தன.

பெரம்பலூர் நகரில் இருந்து வந்த மலர் ரதங்களின் எண்ணிக்கை குறைந்து திருச்சியில் இருந்து வந்த மலர்ரதங்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்தது. நாமக்கல் மாவட்டத்தில் இருந்தும், பெரம்பலூர் மாவட்டம் வரகுபாடியில் இருந்தும் முதல் முறையாக மலர் ரதங்கள் வந்தன. பூச்சொரிதல் விழா ஏற்பாடுகளை சிறுவாச்சூர் சேஷாத்திரி அய்யங்கார் குடும்பத்தினர், இந்து சமய அறநிலையத்துறை திருச்சி உதவி ஆணையர் ராணி, கோவில் செயல் அலுவலர் பாரதிராஜா மற்றும் கோவில் பணியாளர்கள், கோவில் பூசாரிகள் மற்றும் மதுரகாளி யம்மன் பக்தர்கள் செய்திருந்தனர்.

பூச்சொரிதல் விழாவை அடுத்து சித்திரை திருவிழா இம்மாதம் 24-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு பெரியசாமி மலையில் செல்லியம்மனுக்கு காப்புகட்டுதலும், மறுநாள் அதிகாலை 4 மணியளவில் மதுரகாளியம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடக்கிறது. தொடர்ந்து மே மாதம் 3-ந்தேதி தேரோட்டம் விமரிசையாக நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com