

கன்னியாகுமரி,
தமிழகத்தில் கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன்பிடி தடைகாலம் தொடங்கியதால் கன்னியாகுமரியில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மீன்பிடி தடைகாலம்
ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும். இந்த காலக்கட்டத்தில் விசைப்படகுகள் ஆழ்கடலில் சென்று மீன்பிடித்தால் மீன் இனம் அடியோடு அழிந்து விடும் என்று கருதி ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு தமிழக கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைகாலம் நேற்று தொடங்கியது. நேற்று முதல் ஜூன் மாதம் 14- ந் தேதி வரை கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரை விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விசைப்படகுகள் அனைத்தும் தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்குள் சென்று விட்டு இரவு 9 மணிக்கு கரைக்கு திரும்புவது வழக்கம்.
மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை
நேற்று முதல் மீன்பிடி தடைகாலம் தாடங்கியதால் கன்னியாகுமரியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் அவர்களது விசைப்படகுகள் அனைத்தும் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் கரையோரமாக நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் துறைமுகம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
மீன்விலை உயர்ந்தது
மீன்கள் வரத்து இல்லாததால் சந்தையில் மீன் விலையும் உயர்ந்துள்ளது. இதற்கிடையில் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள விசைப்படகுகளை படகு கட்டும் தளத்தில் கரையேற்றி பழுது பார்க்கும் பணியை தொடங்கியுள்ளனர்.