மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவு முடிகிறது மீனவர்கள் ஆழ்கடல் செல்ல முன்னேற்பாடுகள் தீவிரம்

மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது. இதனால் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க தேவையான முன்னேற்பாடுகளில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவு முடிகிறது மீனவர்கள் ஆழ்கடல் செல்ல முன்னேற்பாடுகள் தீவிரம்
Published on

சென்னை,

மீன்களின் இனவிருத்தியை அதிகரிக்கும் நோக்கத்தோடு மத்திய-மாநில அரசுகள் மீன்பிடி தடை காலத்தை நடை முறைப்படுத்தி வருகிறது.

வங்கக்கடலை ஒட்டியுள்ள கிழக்கு கடற்கரை பகுதிகளான தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலும், அரபிக்கடலை ஒட்டியுள்ள மேற்கு கடற்கரை பகுதிகளான கேரளா, கர்நாடகா, மராட்டியம் போன்ற மாநிலங்களிலும் மீன்பிடி தடை காலம் நடைமுறையில் உள்ளது. முதலில் 45 நாட்கள் இருந்த மீன்பிடி தடை காலம் கடந்த 2 ஆண்டுகளாக 60 நாட்களாக உயர்த்தப்பட்டது.

அந்தவகையில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 15-ந் தேதி நள்ளிரவு மீன்பிடி தடை காலம் அமலுக்கு வந்தது. தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் ஏப்ரல் 15-ந் தேதி நள்ளிரவு முதல் மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு செல்லவில்லை.

சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டன. குறுகிய தூரத்தில் நாட்டு மர படகுகள் மூலம் சென்று மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர்.

இந்நிலையில் 60 நாட்கள் மீன்பிடி தடை காலம் இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவுடன் முடிவடைகிறது. நாளை (சனிக்கிழமை) அதிகாலையில் இருந்து விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல இருக்கின்றனர். இதற்கான முன்னேற்பாடுகளில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளுக்கு தேவையான டீசலை தயார் நிலையில் நேற்று ஏற்றினார்கள். அதேபோல், மீன்களை பிடித்து பதப்படுத்துவதற்காக ஐஸ் கட்டி, குடிநீர் கேன், சாப்பாடு பொருட்கள் ஆகியவற்றை விசைப்படகுகளில் ஏற்றும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர்.

கடந்த ஆண்டு மீன்பிடி தடை காலம் முடிந்து ஆழ்கடலுக்கு சென்றபோது மீன்வளம் நன்றாக இருந்ததாகவும், இந்த முறை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஆழ்கடலுக்கு செல்கிறோம் என்றும் மீனவர்கள் தெரிவித்தனர். மீன்பிடி தடை காலத்தில் மீன்கள் விலை கடுமையாக உயர்ந்து இருந்தன. இந்நிலையில் மீனவர்கள் கடலுக்குள் சென்று ஒரு வாரம் கழித்து கரைக்கு திரும்புவார்கள். அவர்கள் கரை திரும்பியதும், மீன்கள் வரத்தை பொறுத்து தான் விலையும் குறையும், மீன் வகைகளும் கிடைக்கும்.

இதுகுறித்து தென்னிந்திய மீனவர் நலச்சங்க தலைவர் கு.பாரதி கூறுகையில், மீன்பிடி தடை காலத்தை அதிகரிப்பதை விட, மீன்வளத்தை பெருக்குவதற்கான முயற்சியில் அரசு ஈடுபட வேண்டும். அதற்கு கடல் வளத்தை பாதுகாக்க கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com