லாரியில் ஏற்றிச்சென்ற ராட்சத உருளை ரோட்டில் உருண்டு விழுந்தது; பொதுமக்கள் சாலை மறியல்

ராட்சத லாரியில் ஏற்றிச்சென்ற 122 டன் எடையுள்ள இரும்பு உருளை, ரோட்டில் உருண்டு விழுந்து, சாலையோரம் உள்ள வீடுகளின் அருகே கிடந்ததால் லாரி கண்ணாடியை உடைத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
லாரியில் ஏற்றிச்சென்ற ராட்சத உருளை ரோட்டில் உருண்டு விழுந்தது; பொதுமக்கள் சாலை மறியல்
Published on

திருவொற்றியூர்,

திருவொற்றியூரில் இருந்து மணலி செல்லும் சாலையில் பக்கிங்காம் கால்வாய் மீது மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால், அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தற்போது பக்கிங்காம் கால்வாய் ஓரமாக ராஜாஜி நகர் வழியாக தற்காலிக சாலை அமைத்து அந்த வழியாக கடந்த 2 வாரங்களாக மணலி மற்றும் மீஞ்சூர் செல்லும் பஸ்கள் மற்றும் லாரிகள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சூரத்தில் இருந்து மணலி சி.பி.சி.எல். நிறுவனத்துக்கு ராட்சத லாரியில் 122 டன் எடைகொண்ட இரும்பு உருளையை ஏற்றிக்கொண்டு வந்தது.

அப்போது பின்னால், மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரியின் டிரைவர், இரும்பு உருளை ஏற்றிச்சென்ற லாரியை முந்திச்செல்ல முயற்சி செய்தார். இதற்காக லாரியை டிரைவர் சாலையோரமாக சற்று திருப்பியதாக தெரிகிறது.

இதனால் ராட்சத லாரியில் இருந்த இரும்பு உருளை, திடீரென பயங்கர சத்தத்துடன் லாரியில் இருந்து சரிந்து சாலையோரம் இருந்த வீடுகளின் அருகே உருண்டு விழுந்தது.

இதனை பார்த்த லாரி டிரைவர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி பொதுமக்கள் ஒன்றுகூடி, விபத்தை ஏற்படுத்திய லாரியின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

பின்னர் வெகுநேரமாகியும் சம்பவ இடத்துக்கு போலீசார் வரவில்லை என்பதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், சத்தியமூர்த்தி நகர் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் வந்து சமரசம் செய்ததையடுத்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

நள்ளிரவு நேரத்தில் இந்த விபத்து நடந்தபோது பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

விபத்து நடைபெற்ற இடத்தை சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் சியாமளா தேவி, உதவி கமிஷனர் பிரபாகரன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அப்போது அங்குவந்த பொதுமக்கள், இந்த சாலை தற்காலிக சாலை என்பதால் கனரக வாகனங்கள் செல்வதற்கு பயனற்றது என்றும், உடனடியாக இந்த சாலையில் லாரிகள் மற்றும் கனரக வாகனங்களை அனுமதிக்கக்கூடாது என்றும் கோரிக்கை வைத்தனர்.

இதைத்தொடர்ந்து ராட்சத கிரேன் மூலம் சாலையோரம் உருண்டு விழுந்த உருளையை எடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com