பெண்ணிடம் ரூ.50 ஆயிரத்திற்கு குழந்தையை வாங்கி சென்றது, ராமேஸ்வரம் டாக்டர்

மேச்சேரி பெண்ணிடம் ரூ.50 ஆயிரத்துக்கு குழந்தையை வாங்கி சென்றது ராமேஸ்வரம் டாக்டர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பெண்ணிடம் ரூ.50 ஆயிரத்திற்கு குழந்தையை வாங்கி சென்றது, ராமேஸ்வரம் டாக்டர்
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்தவர் ராணி (வயது 35). இவர், தனக்கு பிறந்த பெண் குழந்தையை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வரும் ஜெயா என்பவர் மூலம் வேறு ஒரு நபருக்கு ரூ.50 ஆயிரத்திற்கு விற்றதாக கூறப்படுகிறது.

ஆனால் அதன்பிறகு விற்கப்பட்ட எனது பெண் குழந்தையை சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து மீட்டுத்தருமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ராணி ஒரு புகார் மனுவை அளித்தார். குழந்தையை கொடுத்த இடம் மேச்சேரி பஸ்நிலையம் என்பதால் இந்த சம்பவம் தொடர்பாக மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதேசமயம், ராணியின் குழந்தையை துப்புரவு தொழிலாளி ஜெயாவிடம் வாங்கியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ராமேஸ்வரத்தை சேர்ந்த டாக்டர் பாலு என்பவர் தான் அந்த குழந்தையை விலைக்கு வாங்கி சென்றது தெரியவந்தது. இதனிடையே, ராணியின் தங்கை கலைவாணியிடம் குழந்தையை ஒப்படைத்துவிடுவதாக குழந்தையை பெற்று சென்றவர் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ராமேஸ்வரத்தை சேர்ந்த டாக்டர் பாலுவுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. அவரது மனைவிக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் ஊர்மக்கள் தவறாக பேசுவார்கள் எனக்கருதிய டாக்டரின் மனைவி தான் கர்ப்பமாக இருப்பதாக வயிற்று பகுதியில் துணியை வைத்து நடந்து வந்ததாகவும், அதன்பிறகு ஊர் மக்களை அழைத்து டாக்டர் தனது மனைவிக்கு வளைகாப்பு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் எப்படியும் குழந்தை வேண்டும் என்று மனநிலைக்கு வந்த டாக்டர் பாலு, மேச்சேரியை சேர்ந்த ராணியிடம் இருந்து குழந்தையை விலைக்கு வாங்கியுள்ளார். ஆனால் தற்போது ராணி மீண்டும் குழந்தையை கேட்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் டாக்டர் பாலு தவித்து வருகிறார். இருப்பினும், டாக்டர் சொல்வது உண்மையா? என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com