பெண் தாசில்தாரை ‘கதாநாயகி' என வர்ணித்த பா.ஜனதா முன்னாள் மந்திரி - தேசியவாத காங்கிரஸ் கண்டனம்

பெண் தாசில்தாரை கதாநாயகி என பாரதீய ஜனதா முன்னாள் மந்திரி வர்ணித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு தேசியவாத காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது.
பெண் தாசில்தாரை ‘கதாநாயகி' என வர்ணித்த பா.ஜனதா முன்னாள் மந்திரி - தேசியவாத காங்கிரஸ் கண்டனம்
Published on

மும்பை,

மராட்டியத்தில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என பாரதீய ஜனதா வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்த அக்கட்சி திட்டமிட்டு உள்ளது.

இது தொடர்பாக ஜல்னா மாவட்டத்தில் உள்ள கர்கலா கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாரதீய ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி பபன்ராவ் லோனிகர் பேசினார். அப்போது அவர், விவசாயிகள் தங்களுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் கிடைக்க விரும்பினால் போராட்டம் நடத்த வேண்டும். முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், முன்னாள் மந்திரிகள் சந்திரகாந்த் பாட்டீல், சுதீர் முங்கண்டிவார் ஆகியோரை அழைக்கலாம்.

நீங்கள் (மக்கள்) சொல்லுங்கள் யாரை அழைக்க வேண்டும் என்று. போராட்டத்திற்கு கதாநாயகியையும் அழைக்க முடியும். இல்லையென்றால் நம்முடைய தாசில்தார் மேடம் கதாநாயகியாக இருக்கிறார் என்று பேசி உள்ளார்.

பெண் தாசில்தாரை கதாநாயகி' என வர்ணித்த அவரது இந்த பேச்சு தொடர்பான ஆடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக அவரிடம் கேட்ட போது, சிறப்பாக பணி செய்யும் தலைவரை கதாநாயகன் அல்லது கதாநாயகி என்று சொல்லலாம். நான் கூறிய வார்த்தைக்கு அது தான் பொருள். எனவே நான் தாசில்தாரை அவமதிக்கவில்லை. இது தவறான வார்த்தை அல்ல, அதற்கு எதிர்மறையான அர்த்தமும் இல்லை. நீங்கள் அகராதியை சரிபார்க்கலாம், என்றார்.

ஆனால் பபன்ராவ் லோனிகரின் பேச்சுக்கு தேசியவாத காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து அக்கட்சியின் எம்.எல்.சி. வித்யா சவான் கூறுகையில், பெண் தாசில்தார் பற்றிய பபன்ராவ் லோனிகரின் கருத்துக்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அவரது கருத்து பாரதீய ஜனதாவின் மனநிலையை பிரதிபலிக்கிறது. உழைக்கும் பெண்களை மதிக்காமல், அவர்களின் தோற்றம் குறித்து கருத்து தெரிவிப்பதன் மூலம் அவர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தி உள்ளார் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com