கீழ்சாத்தமங்கலம் ஏரியில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார உத்தரவு

கீழ்சாத்தமங்கலம் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார்.
கீழ்சாத்தமங்கலம் ஏரியில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார உத்தரவு
Published on

வில்லியனூர்,

வில்லியனூர் அருகே உள்ளது கீழ்சாத்தமங்கலம். மங்கலம் தொகுதிக்குட்பட்ட இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் பகுதி ஏரியில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. இதை சீரமைக்க வேண்டும் என கவர்னர் கிரண்பெடிக்கு கோரிக்கை மனு அனுப்பினர். இதைத்தொடர்ந்து நேற்று காலை அதிரடி நடவடிக்கையாக கீழ்சாத்தமங்கலம், மேல்சாத்தமங்கலம் பகுதிகளில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு செய்தார்.

கீழ்சாத்தமங்கலம் ஏரியை பார்வையிட்ட கவர்னர் அங்கிருந்த தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றி உடனடியாக தூர்வார வேண்டும், ஏரி குறித்த முழு விவரத்தையும் ஒரு வாரத்துக்குள் தனக்கு தெரிவிக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தனியார் கட்டிடத்தில் மாடியில் செயல்பட்டு வரும் தாய் சேய் சுகாதார நிலையத்தை பார்வையிட்ட அவர், கர்ப்பிணிகள் வந்து செல்வதில் சிரமம் இருப்பதால் அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கிராம பஞ்சாயத்து அலுவலகத்துக்கு அதனை மாற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.

கீழ் சாத்தமங்கலம் பகுதியில் கடந்த 2007-ம் ஆண்டு கட்டப்பட்ட நூலகம் இதுநாள் வரை திறக்கப்படவில்லை. இதனை பார்வையிட்ட கவர்னர் உடனடியாக தனியார் தொண்டு நிறுவனம் மூலம் நூலகத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஏற்பாடுகள் செய்வதாக உறுதி அளித்தார்.

மேல்சாத்தமங்கலம் பகுதியில் காலி இடங்களில் கழிவுநீர் தேங்கி கிடப்பதை பார்வையிட்ட கவர்னர் கிரண்பெடி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகத்திடம் உடனடியாக அவற்றை சுத்தம் செய்யும்படி உத்தரவிட்டார். அப்பகுதிமக்கள் தங்களுக்கு போதிய போக்குவரத்து வசதி, மின்வசதி, கழிவுநீர் வடிகால் வசதி வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

தொகுதி எம்.எல்.ஏ. இங்கு வருவதில்லையா? என கேள்வி எழுப்பிய கவர்னர், கழிவுநீர் வாய்க்கால் அமைத்து கொடுக்கவும், ஏரியை 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தூர்வார வேண்டும், கொம்யூன் பஞ்சாயத்து மூலம் கட்டப்பட்ட பொதுக்கழிப்பிடங்களை மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பொதுப்பிரச்சினைகள் குறித்து முதலில் கொம்யூன் பஞ்சாயத்திடம் மனு கொடுங்கள். பின்னர் எனது பார்வைக்கு தெரிவிக்கலாம் என கூறினார். இந்த ஆய்வின் போது கவர்னருடன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், உதவி பொறியாளர் திருநாவுக்கரசு, போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், மற்றும் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com