கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடுகிறார் எடியூரப்பா: தினேஷ் குண்டுராவ் குற்றச்சாட்டு

பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்த விவகாரத்தில் கீழ்த்தரமான அரசியலில் எடியூரப்பா ஈடுபடுகிறார் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடுகிறார் எடியூரப்பா: தினேஷ் குண்டுராவ் குற்றச்சாட்டு
Published on

பெங்களூரு,

பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா நேற்று முன்தினம் சித்ரதுர்காவில் நிருபர்களிடம் கூறுகையில், புலவாமா மாவட்டத்தில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் துணை ராணுவப்படையினர் 40 பேர் வீரமரணம் அடைந்திருந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படையினர் பாகிஸ்தானில் குண்டுகளை வீசி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தனர். இதனை நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். நாடு முழுவதும் பிரதமர் மோடியின் அலை மீண்டும் வீச தொடங்கியுள்ளது. இதன் மூலம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் 22 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று கூறி இருந்தார்.

எடியூரப்பாவின் பேச்சுக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர்களான சித்தராமையா, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

நமது நாட்டின் வரலாற்றில் எடியூரப்பா போன்று எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரும் பேசியதில்லை. நாட்டுக்காக துணை ராணுவப்படை வீரர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர். நாட்டின் பாதுகாப்புக்காக நாம் அனைவரும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக செயல்படுவது அவசியம். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும், நாட்டின் பாதுகாப்புக்காக மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார். நாட்டின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் கடுமையாக கண்டித்துள்ளன. பயங்கரவாதிகள் மீது இந்திய விமானப்படை குண்டுகளை வீசி தாக்கியதை காங்கிரஸ் வரவேற்றுள்ளது.

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசுடனும், இந்திய ராணுவத்துடனும் காங்கிரஸ் கைகோர்த்துள்ளது. ஆனால் பயங்கரவாதிகளுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளையும், இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்திருப்பதையும் வைத்து பா.ஜனதாவினர் அரசியல் லாபம் அடைய நினைப்பது எந்த வகையில் சரி என்று தெரியவில்லை. இந்த விவகாரத்தில் எடியூரப்பா கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடுகிறார். அவர் பேசிய பேச்சுகளை திரும்ப பெற வேண்டும். மேலும் எடியூரப்பா மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com