விருதுநகர் மாவட்டத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்

விருதுநகர் மாவட்டத்தில் பஸ், ரெயில்களில்கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்
Published on

விருதுநகர்,

நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் தீவிர கண்காணிப்பில் உள்ள நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் தீவிர தடுப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்த மட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகம் கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைக்கு முன்னுரிமை கொடுத்து சுகாதாரம் மற்றும் உள்ளாட்சி சார்ந்த துறை அலுவலர்களை தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தை பொறுத்த மட்டில் மாவட்டத்தின் கேரள எல்லையில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கேரளாவில் இருந்து வருவோரை தீவிர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே இந்த மாவட்டத்துக்குள் அனுமதித்து வருகின்றனர்.

கேரள மாநிலத்தில் இருந்து வரும் பஸ்கள் மற்றும் ரெயில்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள பஸ் நிலையங்கள் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

கலெக்டர் அலுவலகத்துக்கு வருவோர் அனைவரும் கைகழுவிய பின்னரே அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் கண்ணன் ஆய்வு செய்தார்.

மேலும் அவர்அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை நேரில் சென்று பார்வையிட்டார். ஆத்திப்பட்டியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் ஆய்வு செய்தார்.

அந்த வழியாக வந்த வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பதை பார்வையிட்டு வைரஸ் நோய் தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கை கழுவும் முறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினார். திருச்சுழி திருமேனிநாதர் கோவில் மற்றும் அங்குள்ள பஸ் நிலையம், காரியாபட்டி பகுதிக்கும் சென்று அவர் ஆய்வு நடத்தினார்.

அப்போது, திட்ட இயக்குனர் சுரேஷ், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) விஷ்ணுபரன், தாசில்தார்கள் ரவிச்சந்திரன்(திருச்சுழி), பழனி(அருப்புக்கோட்டை), செந்தில்வேல்(காரியாபட்டி)ஆகியோர் உடனிருந்தனர்.

விருதுநகர் நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி கூறியதாவது:-

இந்த மாத இறுதிவரை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. விருதுநகரில் மாரியம்மன் பொங்கல் திருவிழாவையொட்டி கோவிலுக்கு தற்போதே பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வரும் நிலை உள்ளதால் கோவில் அமைந்துள்ள பகுதியில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பஸ் நிலையத்தில் சுகாதார பணியாளர்கள் பொதுமக்களுக்கு கைகழுவுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். அரசு வேறு ஏதேனும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டால் அதற்கும் தயார் நிலையில் இருக்கிறோம். இவ்வாறு கூறினார்.

இதற்கிடையே மாவட்டம் முழுவதும் வெளிநாடுகளில் இருந்து வந்த 67 பேர் சுகாதார துறையின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com