

காங்கிரஸ் சார்பில் நிறுத்தப் பட்ட 3-வது வேட்பாளர் எளிதில் வெற்றி பெற்றார். பா.ஜனதா ஒரு இடத்தை கைப்பற்றியது. மந்திரி கட்சி மாறி வாக்களித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் இருந்து டெல்லி மேல்-சபையில் எம்.பி.க்களாக உள்ள ரகுமான்கான், ராஜீவ் சந்திரசேகர், ராமகிருஷ்ணா, பசவராஜ்கவுடா பட்டீல் ஆகியோரின் பதவி காலம் ஏப்ரல் மாதம் 2-ந் தேதியுடன் நிறைவடைகிறது.
இதையடுத்து அந்த 4 இடங்களுக்கு 23-ந் தேதி (அதாவது நேற்று) தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் ஆளும் காங்கிரஸ் சார்பில் 2 பேரை தேர்ந்து எடுக்கலாம் என்ற நிலையில் ஹனுமந்தய்யா, நசீர்உசேன் ஆகியோர் நிறுத்தப்பட்டனர். அதோடு 3-வது வேட்பாளராக சந்திரசேகரையும் காங்கிரஸ் நிறுத்தி இருந்தது. அதுபோல் பா.ஜனதா சார்பில் ராஜீவ் சந்திரசேகர், ஜனதா தளம்(எஸ்) சார்பில் பாரூக் ஆகியோர் போட்டியிட்டனர்.
4 இடங்களுக்கு 5 பேர் போட்டியிட்டதால் கர்நாடக அரசின் தலைமை செயலகம் அமைந்துள்ள பெங்களூரு விதான சவுதாவில் நேற்று டெல்லி மேல்-சபைக்கு தேர்தல் நடைபெற்றது. ஏற்கனவே அறிவித்தப்படி காலை 9 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. சட்டசபையில் தற்போது மொத்தம் உள்ள 217 எம்.எல்.ஏ.க்களில் முதல்-மந்திரி சித்தராமையா, மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் என 188 பேர் வாக்களித்தனர்.
வருவாய்த்துறை மந்திரி காகோடு திம்மப்பா மற்றும் காங்கிரசை சேர்ந்த பாபுராவ் சின்சனசூர் எம்.எல்.ஏ. ஆகியோர் காங்கிரஸ் வேட்பாளருக்கு பதிலாக ஜனதா தளம்(எஸ்) வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தனர். அந்த வாக்குச்சீட்டில் கட்சி மாறி வாக்கு விழுந்திருப்பதை கண்ட காங்கிரஸ் ஏஜெண்டு, இதுபற்றி உடனே அவர்களிடம் தெரிவித்தார். பின்னர் அவர்கள் இருவரும் அந்த வாக்குச்சீட்டுக்கு பதிலாக புதிய வாக்குச்சீட்டை பெற்று காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்தனர்.
இதற்கு ஜனதா தளம்(எஸ்) கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஒரு முறை வாக்களித்துவிட்டால் அதை மாற்ற முடியாது என்று அக்கட்சி வலியுறுத்தியது. இருந்தாலும் தேர்தல் அதிகாரி மூர்த்தி, காகோடு திம்மப்பா உள்பட 2 பேரும் மீண்டும் வாக்களிக்க அனுமதித்தார். இதையடுத்து ஜனதா தளம்(எஸ்) கட்சி தேர்தலை புறக்கணிப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி அறிவித்தார். இதனால் வாக்குச்சாவடி அறையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மேலும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று ஜனதா தளம்(எஸ்) வலியுறுத்தியது. இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரி, தேர்தல் ஆணையத்திற்கு அக்கட்சியின் வேட்பாளர் பாரூக் மனு அளித்தார். தேர்தலை ரத்து செய்யுமாறு அவர் கோரினார். ஆனால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், ஜனதா தளம்(எஸ்) கட்சி தேர்தலை புறக்கணித்தது. மாலை 4 மணி ஆனதும் ஓட்டுப்பதிவு நிறைவு செய்யப்பட்டது. அதன் பிறகு ஓட்டுப்பெட்டி மூடப்பட்டது. மொத்தம் 188 ஓட்டுகள் பதிவாகி இருந்தது.
ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளர் புகார் அளித்ததை தொடர்ந்து 5 மணிக்கு தொடங்க வேண்டிய ஓட்டு எண்ணிக்கை 3 மணி நேரம் தாமதமாக இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் காங்கிரஸ் 3 இடங்களிலும், பா.ஜனதா கட்சி ஒரு இடத்திலும் வெற்றியை பெற்றுள்ளது.
அதாவது காங்கிரஸ் வேட்பாளர்கள் ஹனுமந்தய்யா 44 ஓட்டுகளும், நசீர்உசேன் 42 ஓட்டுகளும், சந்திரசேகர் 46 ஓட்டுகளும், பா.ஜனதா வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் 50 ஓட்டுகளும் பெற்று வெற்றி பெற்றனர். 4 ஓட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டன. 2 முறை ஓட்டுப்போட்ட காகோடு திம்மப்பா மற்றும் பாபுராவ் சின்சனசூர் ஆகியோரின் ஓட்டுகள் எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை. ஜனதா தளம்(எஸ்) தேர்தலை புறக்கணித்ததால் காங்கிரசின் 3-வது வேட்பாளர் சந்திரசேகர் எளிதில் வெற்றி பெற்றார்.
மேலும் கடந்த டெல்லி மேல்-சபை தேர்தலில் கொறடா உத்தரவை மீறி ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த செலுவராயசாமி, ஜமீர்அகமதுகான், அகண்ட சீனிவாச மூர்த்தி உள்பட 7 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்திருந்தனர். அதேப் போல் இந்த முறையும் அவர்கள் 7 பேரும் கட்சி மாறி காங்கிரஸ் வேட்பாளர் சந்திரசேகருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.