கோவை அருகே நகை கொள்ளை, சரணடைந்த 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை

கோவை அருகே நகைகளை கொள்ளையடித்த வழக்கில் சரணடைந்த 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
கோவை அருகே நகை கொள்ளை, சரணடைந்த 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை
Published on

போத்தனூர்,

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கல்யாண் ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் இருந்து கோவை 100 அடி ரோட்டில் உள்ள கல்யாண் ஜுவல்லர்ஸ் நகைக்கடைக்கு காரில் ரூ.98 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் கொண்டு வரப்பட்டன. கடந்த 7-ந்தேதி கோவை நவக்கரை அருகே 2 கார்களில் வந்த கொள்ளை கும்பல் நகைக்கடை ஊழியர்கள் 2 பேரையும் மிரட்டி காரில் இருந்து இறக்கிவிட்டு விட்டு காருடன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது. இதில் நகைக்கடை ஊழியர்கள் வந்த கார் மற்றும் கொள்ளையர்கள் தப்பி சென்ற ஒரு கார் ஆகியவை மீட்கப்பட்டன.

இதற்கிடையில் இந்த கொள்ளையில் தொடர்புடைய வேலூரை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், தமிழ்செல்வன் ஆகிய 2 பேர் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள கோர்ட்டில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இது குறித்து தனிப்படை போலீசார் கூறியதாவது:-

கொள்ளை கும்பல் அடையாளம் தெரிந்து உள்ளது. தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய தீவிர முயற்சி செய்து வருகிறோம். கோர்ட்டில் சரணடைந்த 2 பேரும் கோவை கோர்ட்டில் வருகிற 18-ந் தேதி ஆஜர்படுத்தப்பட உள்ளனர். அவர்கள் 2 பேரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் அனுமதி கேட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் தெரிவிக்கும் தகவலின் அடிப்படையில் கொள்ளையின் பின்னணியில் உள்ளவர்கள், தலைமறைவாக உள்ள 9 பேர் பற்றிய முழு விவரமும் தெரியவரும் என்று கருதுகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com