கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவில் பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க திட்டம்

கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவில் பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளோம் என்று திருப்பதி தேவஸ்தான தலைமை அர்ச்சகர் சேஷாத்ரி கூறினார்.
கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவில் பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க திட்டம்
Published on

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அதை திருப்பதி தேவஸ்தான தலைமை அர்ச்சகர் சேஷாத்ரி, ஆகம ஆலோசகர் என்.ஏ.கே. சுந்தரவரதன்சுவாமி ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் தலைமை அர்ச்சகர் சேஷாத்ரி, ஆகம ஆலோசகர் என்.ஏ.கே. சுந்தரவரதன்சுவாமி ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

தீவிரம்

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளோம். அதைத்தொடர்ந்து அடுத்த மாதம் (ஜூலை) 11-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்தும் வகையில் பணிகள் நடந்து வருகிறது. முன்னதான ஜூலை 6-ந் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். ஆனால் இன்னும் 20 முதல் 25 சதவீத பணிகள் முடிய வேண்டும். அப்பணிகள் குறித்த காலத்தில் முடியாவிட்டால் கும்பாபிஷேகம் தள்ளிப்போகும்.

இங்கு அமையும் 3 சன்னதிகளுக்கும் தலா 4 அர்ச்சகர்கள் வீதம் பணியில் ஈடுபடுவார்கள். ஆகம விதிப்படி வாஸ்துமுறையில் சன்னதிகள் அமைந்துள்ளனவா? என்றும் ஆய்வு செய்தோம். தற்போது வெங்கடாஜலபதி சன்னதி நடுவிலும் அதற்கு தெற்கு பக்கம் பத்மாவதி தாயார் சன்னதியும் வடக்கு பக்கம் ஆண்டாள் சன்னதியும், நேர் எதிரே கருடபகவான் சன்னதியும் அமைந்துள்ளது. வாஸ்துபடி இந்த கோவில் அமைக்கப்பட்டு உள்ளது.

ஜூலை 11-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுமானால் 4-ந் தேதி சிலைகள் அனைத்தும் கொண்டு வரப்பட்டு யாகசாலை பூஜையில் வைக்கப்படும். வைகுண்ட ஏகாதசி அன்று கோவிலின் வடக்கு பக்கம் உள்ள வழியாக சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கோவிலின் மூலஸ்தானம் முன்பு கொடிமரம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கொடிமரம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com