கறம்பக்குடியில் ஏரி, குளங்கள் வறண்டன தண்ணீர் இன்றி கால்நடைகள் தவிப்பு

கடுமையான வெயிலை தொடர்ந்து கறம்பக்குடி பகுதியில் ஏரி, குளங்கள் வறண்டன. தண்ணீர் இன்றி கால்நடைகள் தவித்து வருகின்றன.
கறம்பக்குடியில் ஏரி, குளங்கள் வறண்டன தண்ணீர் இன்றி கால்நடைகள் தவிப்பு
Published on

கறம்பக்குடி,

கடுமையான வெயிலை தொடர்ந்து கறம்பக்குடி பகுதியில் ஏரி, குளங்கள் வறண்டன. தண்ணீர் இன்றி கால்நடைகள் தவித்து வருகின்றன.

வறண்டன

கறம்பக்குடி ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் மற்றும் ஒரு பேரூராட்சி உள்ளது. இதில் 10 ஊராட்சிகள் காவிரி பாசன பகுதிகளாகும். மீதமுள்ளவை வானம் பார்த்த பூமியாகவே உள்ளன. பருவ காலத்தில் பெய்யும் மழை மற்றும் ஆழ்குழாய் பாசனம் மூலமே அப்பகுதியில் விவசாயம் நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக கறம்பக்குடி பகுதியில் போதிய மழை பெய்யாத நிலையில், சென்ற ஆண்டு ஓரளவு மழை பெய்தது.

காவிரியிலும் தண்ணீர் திறக்கப்பட்டு கடை மடைக்கும் தண்ணீர் சென்றது. இதனால் கறம்பக்குடி பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பின. விவசாய பணிகளும் ஓரளவு நடைபெற்றது. தொடர்ந்து ஏரி, குளங்களில் தண்ணீர் கிடக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் கோடையில் பயிர் சாகுபடியில் ஈடுபட்டனர். ஆனால் கடந்த 3 மாதங்களாக கறம்பக்குடி பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் இருந்த குளங்கள் அனைத்தும் வறண்டன. இதனால் விவசாய பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கால்நடைகள் தவிப்பு

மேலும், மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் வழக்கமாக தண்ணீர் குடிக்கும் ஏரி, குளங்கள் வறண்டு கிடப்பதால் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றன. மேலும் தொடர் மின்தடை மும்முனை மின்சாரம் கிடைக்காதது போன்றவற்றால் ஆழ்குழாய் தண்ணீரையும் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே ஏரி, குளங்கள் வற்றி உள்ள நிலையில் விவசாய பணி மற்றும் கால்நடைகளின் தண்ணீர் தேவைக்கு உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com