ஏரியூர் அருகே, ஏரி தூர்வாரும் பணியை தடுத்து நிறுத்தி வாகனங்கள் சிறை பிடிப்பு

ஏரியூர் அருகே ஏரி தூர்வாரும் பணி முறையாக நடக்கவில்லை என கூறி பணியை தடுத்து நிறுத்தி வாகனங்களை இன்பசேகரன் எம்.எல்.ஏ. மற்றும் பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏரியூர் அருகே, ஏரி தூர்வாரும் பணியை தடுத்து நிறுத்தி வாகனங்கள் சிறை பிடிப்பு
Published on

ஏரியூர்,

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள ராமகொண்டஅள்ளி கிராமத்தில் உள்ள ஏரி தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி முறையாக நடைபெறவில்லை என பொதுமக்கள் இன்பசேகரன் எம்.எல்.ஏ.விடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து அவர் நேரில் சென்று தூர்வாரும் பணியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பென்னாகரம் ஒன்றிய பொறியாளர் பழனியம்மாள் மற்றும் பணி மேற்பார்வையாளர் ஆகியோர் ஏரி தூர்வாரும் பணி குறித்து விளக்கி கூறினர்.

அப்போது ஏரி தூர்வாரும் பணி முறையாக நடைபெறவில்லை எனக்கூறி இன்பசேகரன் எம்.எல்.ஏ. மற்றும் பொதுமக்கள் பணியை தடுத்து நிறுத்தி பொக்லைன் எந்திரம் உள்ளிட்ட வாகனங்களை சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து ஏரி தூர்வாரும் பணி மீண்டும் தொடங்கியது.

இதுகுறித்து இன்பசேகரன் எம்.எல்.ஏ. கூறுகையில், முறையான பணி ஆணை இல்லாமலும், முறையான அளவீடுகள் இன்றியும் ஏரி தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் ஏரியில் இருந்து அள்ளப்படும் மண் ஏரியின் கரைகளை பலப்படுத்த பயன்படுத்தாமல் விவசாய நிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதுகுறித்து கலெக்டர் மலர்விழியிடம் புகார் அளிக்கப்படும் என தெரிவித்தார். ஏரி தூர்வாரும் பணியை தடுத்து நிறுத்தி வாகனங்களை சிறைபிடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com