

சுல்தான்பேட்டை,
பொள்ளாச்சியை சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது 47), லாரி டிரைவர். இவர், நேற்று மதியம் சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிமலை பகுதியில் இருந்து லாரியில் தென்னை நார் பாரம் ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சிக்கு புறப்பட்டார். வரும் வழியில் உள்ள ஒரு எடை நிலையத்தில் லாரியை நாருடன் மொத்த எடை போட்டு விட்டு அங்கிருந்து சிறிது தூரத்தில் லாரியை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார்.
அவர் சென்ற சிறிது நேரத்தில் லாரியில் இருந்து கரும் புகை வந்தது. இதை பார்த்ததும் அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி பல்லடம் தீயணைப்பு நிலையத்துக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே தீ மளமளவென பரவியால் பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையே லாரி டிரைவர் திருமூர்த்தி அங்கு வந்தார். அவர் லாரி தீப்பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
லாரியில் இந்த தென்னை நார் முழுவதும் தீப்பற்றி லாரியும் சேர்ந்து எரிய தொடங்கியது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து நார்களை லாரியில் இருந்து பொக்லைன் மூலம் கீழே எடுத்து போட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடியும் தீயை முழுமையாக அணைக்க முடியவில்லை. தீயில் லாரி முற்றிலும் எரிந்தது. மேலும், லாரியில் இருந்த பல லட்சம் மதிப்பிலான தென்னை நாரும் கருகி சாம்பலானது. லாரி நிறுத்தப்பட்ட பகுதியில் இருந்த மின்கம்பியில் தென்னை நார் உரசியதால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இது குறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.