வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி மெக்கானிக் தற்கொலை முயற்சி

வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கக்கோரி ஒரத்தநாட்டில் மெக்கானிக் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி மெக்கானிக் தற்கொலை முயற்சி
Published on

ஒரத்தநாடு,


தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள கண்ணந்தங்குடி கீழையூர் வடக்கு நத்தம் பகுதியை சேர்ந்தவர் லியோபாஸ்டின் (வயது31). மெக்கானிக். இவரது குடும்பத்தினருக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு குடும்பத்தினருக்கும் நீண்ட காலமாக பாதை பிரச்சினை இருந்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் லியோபாஸ்டின் குடும்பத்தினர் அவர்களது வீட்டிற்கு மின் இணைப்பு வேண்டி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு இவரது வீட்டிற்கு அருகில் உள்ள நிலத்தின் உரிமையாளர் அவரது நிலத்தின் வழியே மின்பாதை (கம்பி) கொண்டு செல்லக்கூடாது என்று சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் மின்வாரிய அலுவலர்கள் லியோபாஸ்டின் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்குவதில் காலதாமதம் செய்ததாக தெரிகிறது.


இந்தநிலையில் லியோபாஸ்டின் திடீரென நேற்று காலை 9 மணியளவில் ஒரத்தநாடு ராயர்தெருவில் உள்ள ஒரு தனியார் செல்போன் கோபுரத்தில் மேலே ஏறி நின்று, அங்கிருந்து தனது வீட்டிற்கு மின் இணைப்பு வழங்காவிட்டால் கீழே குதித்து தற்கொலை செய்துகொள்வேன் என்று கூறினார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒரத்தநாடு போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அங்கு சென்ற ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு காமராஜ், தாசில்தார் அருள்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட லியோபாஸ்டினிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவரது தாயார் மற்றும் உறவினர்களையும் சம்பவ இடத்திற்கு வரவழைத்து லியோபாஸ்டினை தற்கொலை முயற்சியை கைவிட்டு கீழே இறங்குமாறு கூறினர். இதன் பிறகு லியோபாஸ்டின் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். பின்னர் அதிகாரிகள் அவரை ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்தபகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com