

மேட்டூர்,
கடந்த 5 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வழக்கமாக திறக்கப்படும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இந்த காலகட்டங்களில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததுடன், கர்நாடக மாநில அணைகளில் இருந்து போதிய அளவு தண்ணீர் திறந்துவிடப்படாததால் பாசனத்திற்கு குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் திறக்க முடியவில்லை.
இதனால் கடந்த சில ஆண்டுகளாக டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி எதிர்பார்த்த அளவு மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டும் கர்நாடகத்தில் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. தமிழகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக வினாடிக்கு 200 கனஅடிக்கும் அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் மழை பொழிவு குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 176 கனஅடியாக குறைந்தது. இதனால் நேற்று முன்தினம் 22.19 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலையில் 22.08 அடியாக குறைந்தது. நீர்வரத்து குறைவு காரணமாக மாலையில் 22 அடியாக நீர்மட்டம் குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
கடந்த ஆண்டு நிலவரம்
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அணை நீர்மட்டம் 42.33 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,640 கனஅடி வீதம் நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. கடந்த ஆண்டு இதே நேரத்தில் அணை நீர்மட்டம் சீராக உயர்ந்து வந்த நிலையில் இந்த ஆண்டு அணைக்கு நீர்வரத்து குறைந்ததுடன், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் டெல்டா பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மழைபெய்ய வேண்டி வருணபகவானை வழிபட்டு வருகின்றனர்.