நாகை மாவட்டத்தில் கனமழை குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது

நாகை மாவட்டத்தில் கன மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
நாகை மாவட்டத்தில் கனமழை குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது
Published on

நாகப்பட்டினம்,

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் நாகை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்த மழை காரணமாக சம்பா சாகுபடி செய்யப்பட்டிருந்த வயல்களில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதையடுத்து விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். கடந்த சில நாட்களாக நாகையில் மழை இல்லை. வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் விவசாயிகள் நிறுத்தி வைத்திருந்த சம்பா சாகுபடி பணிகளை மீண்டும் தொடங்கினர். உரமிடுதல், களை பறித்தல் உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் நாகை மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்ய தொடங்கியது.

நாகை மாவட்டம் கீழ்வேளூர், பட்டமங்கலம், தேவூர், இருக்கை, வடுகச்சேரி, குருக்கத்தி, அத்திப்புலியூர், திருக்கண்ணங்குடி, வடக்காலத்தூர் உள்ளிட்ட இடங்களில் விடிய, விடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. நேற்று காலையிலும் கீழ்வேளூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

நாகையில் குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். நாகை காடம்பாடியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முகாம் அலுவலகம், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு அலுவலகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலர்கள் குடியிருப்பு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பாதையில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றதால் அலுவலக ஊழியர்கள், குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் சிரமப்பட்டனர். இப்பகுதியில் தேங்கி உள்ள மழை நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் பலத்த மழை பெய்தது. நேற்று 2-வது நாளாக சீர்காழி பகுதியில் பரவலாக மழை பெய்தது. மழை காரணமாக சீர்காழி பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், காமராஜர் வீதி, ஈசானிய தெரு, கொள்ளிடம் முக்கூட்டு, வ.உ.சி.தெரு, மாரிமுத்து நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தன. பழைய பஸ் நிலையம் பகுதியில் கடைகளுக்குள் மழைநீர் புகுந்ததால் வியாபாரிகள் சிரமத்துக்கு ஆளாயினர்.

சீர்காழி நகர பகுதியில் உள்ள சாலைகளில் தேங்கிய மழைநீரை நகராட்சி ஆணையர் அஜிதாபர்வீன் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் அப்புறப்படுத்தினர். இதேபோல் வைத்தீஸ்வரன்கோவில், கீழவீதி, தெற்குவீதி, ரெயில்வேரோடு, புங்கனூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் தேங்கிய மழைநீரை பேரூராட்சி செயல்அலுவலர் பாரதிதாசன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் அப்புறப்படுத்தினர். மயிலாடுதுறை, பொறையாறு, தரங்கம்பாடி, செம்பனார்கோவில் உள்ளிட்ட இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.

வேதாரண்யம், நாலுவேதபதி, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், பெரியகுத்தகை, ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. வேதாரண்யத்தில் கடல் சீற்றமாக காணப்பட்டது. கனமழை மற்றும் சூறைக்காற்று வீசியதன் காரணமாக வேதாரண்யம் பகுதி மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க செல்லவில்லை. சூறைக்காற்று வீசியதால் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்திருந்தனர். இதேபோல நாகை, சீர்காழி, திருமுல்லைவாசல், கூழையாறு, தொடுவாய் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

நாகை மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் சீர்காழியில் அதிகபட்சமாக 79 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டர் அளவுகளில் வருமாறு:-

சீர்காழி-79, வேதாரண்யம்-76, கொள்ளிடம்-67, நாகை-58, திருப்பூண்டி-55, மணல்மேடு 37, தலைஞாயிறு-33, தரங்கம்பாடி-26, மயிலாடுதுறை-17.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com