வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 5,754 பேர் விண்ணப்பம் சிறப்பு பார்வையாளர் தகவல்

கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 5,754 பேர் விண்ணப்பித்துள்ளதாக சிறப்பு பார்வையாளர் சுடலைக்கண்ணன் தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 5,754 பேர் விண்ணப்பம் சிறப்பு பார்வையாளர் தகவல்
Published on

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வாக்காளர் பட்டியல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தமிழக அரசின் எல்காட் நிறுவன மேலாண்மை இயக்குனரும், கரூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளருமான சுடலைக்கண்ணன் தலைமை தாங்கினார். கலெக்டர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு பார்வையாளர் சுடலைக்கண்ணன் பேசியதாவது:-

கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி) மற்றும் குளித்தலை சட்டமன்ற தொகுதிகளில் வருகிற 2018 ஜனவரி 1-ந் தேதியை தகுதி நாளாகக்கொண்டு 18 வயது நிரம்பியவர்கள் புதிய வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதற்கும், வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்கம் செய்யவும், திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் ஏதுவாக கடந்த மாதம் (அக்டோபர்) 3-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

கடந்த 8-ந் தேதி நடந்த சிறப்பு முகாமில் 3,510 விண்ணப்பங்களும், 22-ந் தேதி சிறப்பு முகாமில் 5,205 விண்ணப்பங்களும், உதவி கலெக்டர்கள், தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் இணைய தளங்கள் வாயிலாக 912 விண்ணப்பங்களும் என 9,627 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில் புதிய வாக்காளர்களாக பெயர் சேர்க்க 5,754 பேரும், பெயர் நீக்கம் செய்ய 1,595 பேரும், திருத்தம் மேற்கொள்வதற்காக 1,493 பேரும், இடமாற்றம் தொடர்பாக 785 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

மேலும் கரூர் மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளிலும் கள ஆய்வு மேற்கொண்டபோது இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இருமுறை பதிவு செய்தவர்கள் என 9,688 வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுநாள் வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் மற்றும் திருத்தம் மேற்கொள்ளாதவர்கள் வருகிற 30-ந் தேதிக்குள் மனுக்கள் அளிக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக அரவக்குறிச்சி தாசில்தார் அலுவலகத்தில் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட வாக்காளர் பட்டியலை சுடலைக்கண்ணன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிவப்பிரியா, தேர்தல் தாசில்தார் துரைசாமி மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com