

ஆலந்தூர்,
சென்னை வேளச்சேரியில் நேற்று புதிதாக பிரியாணி கடை திறக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என அறிவித்து இருந்தனர். இதை அறிந்த பொதுமக்கள், காலை முதலே பிரியாணி கடை முன்பு குவிந்தனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து சமூக இடைவெளி இல்லாமல் வரிசை கட்டி நின்றனர்.
இதையறிந்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள், உடனடியாக விரைந்து வந்தனர். கொரோனா அதிகமாக பரவி வரும் நேரத்தில் சமூக இடைவெளி இல்லாமல் கடையில் அதிக கூட்டம் கூடி இருப்பதால் உடனே கடையை மூடும்படி கூறினர்.
அதற்கு அங்கிருந்த பொதுமக்கள், தேர்தல் நேரத்தில் கொரோனா பரவ வில்லையா? இப்போது மட்டும் பரவுமா? என்று கேட்டு அதிகாரிகளுடன் வாக்கு வாதம் செய்தனர்.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், அரை மணிநேரம் மட்டும் நேரம் ஒதுக்கி, அதற்குள் பிரியாணிக்கு பில் வாங்கியவர்களுக்கு மட்டும் பிரியாணி கொடுத்து விடும்படி கூறினர். அதன்படி அனைவருக்கும் பிரியாணி கொடுத்த பிறகு கடையை பூட்டி சீல் வைத்தனர். கடை திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே சீல் வைக்கப்பட்டதால் பிரியாணி கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.