பட்டுக்கோட்டை பகுதியில் பரவலாக மழை மகாராஜசமுத்திரம் அணை நீர் கடலில் கலந்து வீணாகும் அவலம்

பட்டுக்கோட்டை பகுதியில் பரவலாக பெய்து வரும் மழையால் மகாராஜசமுத்திரம் அணை நிரம்பி தண்ணீர் கடலில் கலந்து வீணாகுகிறது.
பட்டுக்கோட்டை பகுதியில் பரவலாக மழை மகாராஜசமுத்திரம் அணை நீர் கடலில் கலந்து வீணாகும் அவலம்
Published on

பட்டுக்கோட்டை,

பட்டுக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட தொக்காலிக்காடு கிராமம் அருகே மகாராஜசமுத்திரம் காட்டாற்று அணை நீர் கடலில் கலந்து வீணாவதை தடுத்து கல்லணைக்கால்வாய் பாசன கடைமடை பகுதியான ராஜாமடம், மகிழங்கோட்டை, தொக்காலிக்காடு, சேண்டாக்கோட்டை, பள்ளிகொண்டான், நடுவிக்காடு, மிலாரிக்காடு உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறும் வகையில் கடந்த 1955-ம் ஆண்டு மகாராஜசமுத்திரம் அணை கட்டப்பட்டு அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த அணை மூலம் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று ஒருபோக சாகுபடியும் நடைபெற்று வந்தது. பொதுப்பணித்துறை கண்காணிப்பில் இருந்து வரும் இந்த அணை காலப்போக்கில் பராமரிப்பின்றி சாகுபடிக்கு பயன்படாமல் இந்த அணை தண்ணீர் கடலில் கலந்து வீணாகி வருகிறது.

பெருந்தலைவர் காமராஜர் முதல்- அமைச்சராக இருந்தபோது கடைமடை பாசன விவசாயிகளின் நலன் கருதி கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்ட இந்த அணையை சரிவர பராமரித்து இருந்தால் மகிழங்கோட்டை, ராஜாமடம் உள்ளிட்ட பல கிராமங்கள் பாசன வசதி பெற்று இருக்கும். இந்த அணையை உயர்த்தி பலப்படுத்தினால் இன்னும் பல கிராமங்கள் மட்டுமின்றி அருகில் உள்ள அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கும் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் கொடுத்திருக்க முடியும். இந்த அணையின் நீரை ராஜாமடம் சி.எம்.பி. வாய்க்காலில் இணைத்து பக்கத்தில் உள்ள கடைமடை பாசன கிராமங்கள் ஒரு போக சாகுபடி செய்து பயன்பெற்றிருக்கலாம்.

புதுக்கோட்டை உள்ளூர் செல்லிக்குறிச்சி ஏரி 400 ஏக்கர் பரப்பளவு உள்ளது. இந்த ஏரியில் அணையின் நீரை பெருக்கினால் 1500 ஏக்கர் இருபோக சாகுபடி செய்யலாம். பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் மகாராஜசமுத்திரம் அணை நிரம்பி தண்ணீர் அதிராம்பட்டினத்துக்கும் மல்லிப்பட்டினத்துக்கும் இடையில் கடலில் கலந்து வீணாகி வருகிறது. இந்த அணையின் இருபக்கமும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் தரிசாக கிடக்கிறது. இந்த அணையின் தண்ணீரை தேக்கி ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டி பாசனத்துக்கு பயன்படுத்திக்கொள்ள சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து ஓய்வு பெற்ற வேளாண்மை உதவி இயக்குனர் மு.கணேசன் கூறியதாவது:-

பட்டுக்கோட்டை தாலுகாவில் மகாராஜசமுத்திரம் ஆறு, நசுவினி ஆறு, கண்ணன் ஆறு, பாட்டுவனாச்சி ஆறு, அக்கினி ஆறு மற்றும் இப்பகுதி காட்டாறுகளின் குறுக்கே கடைமடை பகுதிகளில் அணைகளை கட்டி சி.எம்.பி. வாய்க்கால்களில் இணைத்துவிட்டால் கடைமடை பாசன பகுதியில் தண்ணீர் பிரச்சினை தீர்ந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com