சத்துணவு கூடத்தை பொதுமக்கள் முற்றுகை பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருப்பத்தூர் அருகே சத்துணவு கூடத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு, பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சத்துணவு கூடத்தை பொதுமக்கள் முற்றுகை பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Published on

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே உள்ள ஜம்மணபுதூர் ஊராட்சி புதுப்பூங்குளத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. பள்ளியில் 80 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் சத்துணவு அமைப்பாளராக அதே பகுதியை சேர்ந்த முருகேசனும், சத்துணவு உதவியாளராக புஷ்பாவும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் புஷ்பா வேலைக்கு வருவதில்லை என தெரிகிறது. ஆனால் புஷ்பா வேலைக்கு வந்தது போன்று, முருகேசன் வருகை பதிவேட்டில் பதிவு செய்து உள்ளார். மேலும் புஷ்பாவின் சம்பளத்தை முருகேசன் எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் முருகேசன் பள்ளி குழந்தைகளுக்கு சரிவர உணவு, முட்டை போன்றவற்றை வழங்குவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு பள்ளியில் உள்ள சத்துணவு கூடத்தை முற்றுகையிட்டனர். பின்னர் கூடத்தின் கதவுக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரகுபதி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து, அமைப்பாளர் முருகேசன் மீது மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவிப்பதாகவும், துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். அதன்பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அதைத் தொடர்ந்து சத்துணவு கூடம் திறக்கப்பட்டு, மதிய உணவு தயார் செய்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com