நாவலூர் அருகே கொள்ளையர்களால் தாக்கப்பட்ட பெண் என்ஜினீயரை போலீஸ் கமிஷனர் சந்தித்து நலம் விசாரித்தார்

கொள்ளையர்களால் தாக்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் என்ஜினீயர் லாவண்யாவை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
நாவலூர் அருகே கொள்ளையர்களால் தாக்கப்பட்ட பெண் என்ஜினீயரை போலீஸ் கமிஷனர் சந்தித்து நலம் விசாரித்தார்
Published on

ஆலந்தூர்,

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் லாவண்யா (வயது 26). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், சென்னை கேளம்பாக்கம் அருகே நாவலூரில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதற்காக அருகில் உள்ள தாழம்பூரில் தங்கி இருந்தார்.

கடந்த 13-ந் தேதி நள்ளிரவில் லாவண்யா, கிண்டியில் உள்ள தங்கள் நிறுவனத்தின் கிளையில் இருந்து வேலை முடிந்து தனது மொபட்டில் பெரும்பாக்கம் நுக்கம்பாளையத்தில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து தாழம்பூருக்கு சென்று கொண்டிருந்தார். ஒட்டியம்பாக்கம் அரசன்கழனி-காரணை சாலையில் சென்றபோது, மர்மகும்பல் ஒன்று அவரை முட்புதருக்குள் தூக்கிச்சென்று கத்தியால் தலையில் தாக்கி அவரிடம் இருந்த நகைகள், செல்போன்கள், மடிக்கணினி மற்றும் மொபட்டை கொள்ளையடித்துச் சென்றது.

இதில் உயிருக்கு போராடிய அவரை போலீசார் மீட்டு பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக செம்மஞ்சேரியை சேர்ந்த விநாயகமூர்த்தி (20), நாராயணமூர்த்தி (19), லோகேஷ் (19) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் பெரும்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் என்ஜினீயர் லாவண்யாவை, நேற்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார்.

இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடித்துவிட்டதாகவும் லாவண்யாவிடம் அவர் தெரிவித்தார்.

அப்போது போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனிடம் லாவண்யா கூறியதாவது:-

நான் பணி முடிந்து வீட்டுக்கு சென்றேன். இருட்டான பகுதியில் இருந்து சிலர் ஓடிவந்து என்னை தாக்கினார்கள். 5 நிமிடங்களில் இந்த சம்பவம் நிகழ்ந்துவிட்டது. இது என் வாழ்க்கையில் மிகுந்த துரதிர்ஷ்டவசமாகி விட்டது. ஆனால் என்னை மீட்டு என் உயிரை காப்பாற்றியதற்கு நன்றி. கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு என் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்கு ஏற்பட்ட இதுபோன்ற ஒரு சம்பவம், வேறு யாருக்கும் நடக்கக்கூடாது. அந்த நேரத்தில் போலீஸ்காரர்கள் வந்து என்னை மீட்டு மருத்துவமனையில் சேர்க்காமல் விட்டு இருந்தால் என் வாழ்க்கை முடிந்து போயிருக்கும். என்னுடைய பணிகளை செய்ய வேண்டும் என்று நிறுவனத்தில் என்னை எதிர்பார்த்துக்கொண்டு இருப்பார்கள். வரக்கூடிய எனது பிறந்தநாளை நண்பர்களுடன் சிறப்பாக கொண்டாடுவேன்.

இவ்வாறு அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

உடனே போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், உங்களை இறைவன் காப்பாற்றி விட்டார். நீங்கள் பூரண நலம் பெற்று என் அலுவலகத்துக்கு வரவேண்டும் என தெரிவித்து, அவருக்கு மலர்க்கொத்தை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் கொள்ளையர்களை பிடித்த மடிப்பாக்கம் உதவி கமிஷனர் கோவிந்தராஜ், பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com