போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் 4 டயர்கள் திருட்டு

ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் 4 டயர்கள் திருடப்பட்டுள்ளது.
போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் 4 டயர்கள் திருட்டு
Published on

ஓமலூர்,

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி சந்தைபேட்டை பகுதியில் உள்ள சரபங்கா ஆற்றுக்கு செல்லும் ஓடையை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி பாரதீய ஜனதா கட்சியினர் தூர்வாரினர். இதில் உரிய அனுமதியின்றி ஓடையை தூர்வாரி மண் அள்ளுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் காடையாம்பட்டி வருவாய் ஆய்வாளர் ராஜலட்சுமிக்கு புகார் வந்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மண் அள்ள பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் மற்றும் டிப்பர் லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்து தீவட்டிப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக காடையாம்பட்டி வருவாய் ஆய்வாளர் ராஜலட்சுமி தீவட்டிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார்.

இதன்பேரில் அனுமதியின்றி மண் அள்ளியதாக பா.ஜனதா காடையாம்பட்டி நகர தலைவர் சதீஷ் மற்றும் பொக்லைன் டிரைவர் கார்த்திக், டிப்பர் லாரி டிரைவர் பழனிவேல் (26) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கார்த்திக், பழனிவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட டிப்பர் லாரி மற்றும் பொக்லைன் எந்திரம் ஆகியவை போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனிடையே நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் போலீஸ் நிலையம் முன்பு இருந்த மின்கம்பத்தில் எரிந்து கொண்டிருந்த தெருவிளக்கை உடைத்தனர். இதனால் அந்த பகுதியை இருள்சூழ்ந்தது. இதை பயன்படுத்தி டிப்பர் லாரியின் பின்பக்கத்தில் இருந்த 4 டயர்களை, டிஸ்க் உடன் மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர்.

நேற்று காலை அருகில் உள்ள கடைக்காரர் ஒருவர், லாரி டயர்கள் இல்லாமல் இருப்பதை பார்த்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் டயர்கள் திருட்டு போனது போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக லாரி டயர்களை திருடி சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருட்டு போன டயர்கள் மற்றும் டிஸ்க்கின் மதிப்பு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் இருக்கும் என தெரிகிறது.

போலீஸ் நிலையத்திலேயே லாரி டயர்கள் திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com