தனியார் மதுபான ஆலையை முற்றுகையிட முயற்சி போலீசார் தடுத்து நிறுத்தி வேன்களில் ஏற்றி சென்றனர்

கந்தர்வகோட்டை அருகே தனியார் மதுபான ஆலையை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வேன்களில் ஏற்றி சென்றனர்.
தனியார் மதுபான ஆலையை முற்றுகையிட முயற்சி போலீசார் தடுத்து நிறுத்தி வேன்களில் ஏற்றி சென்றனர்
Published on

கந்தர்வகோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுகா, கல்லாக்கோட்டை கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான மதுபான ஆலை உள்ளது. இந்த ஆலையை மூடக்கோரி மகளிர் ஆயம் அமைப்பின் சார்பில், அந்த அமைப்பின் தலைவி லெட்சுமி அம்மாள் தலைமையிலும், தமிழ்தேசிய பேரியக்கத்தின் தலைவர் மணியரசன் முன்னிலையிலும் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களும் பங்கு பெற்றனர்.

முன்னதாக அவர்கள் கல்லாக்கோட்டை கடைவீதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மதுபான ஆலையை நோக்கி வந்தனர். ஊர்வலத்தின்போது, மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து கோஷங்களை எழுப்பியபடி வந்தனர். மேலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து கல்லாக்கோட்டை பகுதியில் விவசாயம் முற்றிலும் அழிந்து விட்டது. ஆகவே, விவசாயத்தை பாதுகாத்திடவும், பெண்களின் வாழ்வாதாரத்தை காத்திடவும் இந்த ஆலையை மூட வேண்டும் என கூறி ஆலையை முற்றுகையிட வந்தனர்.

தடுத்து நிறுத்திய போலீசார்

போராட்டம் காரணமாக ஆலை முன்பு புதுக்கோட்டை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், கந்தர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆலையை முற்றுகையிட வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களை போலீஸ் வேன்களில் ஏற்றி கந்தர்வகோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com