டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை

ஓமலூர் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை
Published on

ஓமலூர்,

ஓமலூரை அடுத்துள்ள முத்துநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடை அருகில், முத்துநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, திரவுபதி அம்மன் கோவில், தனியார் மெட்ரிக் பள்ளி, வாரச்சந்தை என பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகள் உள்ளன.

இந்த கிராமத்தையொட்டி சுற்றுவட்டாரத்தில் 15 கிலோமீட்டர் சுற்றளவில் வேறு எதுவும் அரசு மதுக்கடை இல்லாததால், இந்த மதுக்கடைக்கு நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை தினமும் ஆயிரக்கணக்கான மதுபிரியர்கள் வந்து மதுபாட்டில்களை வாங்கி மது அருந்தி வருகின்றனர்.

இதனால் இந்த பகுதியில் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மதுக்கடை உள்ள பாதை வழியாக செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இங்குள்ள கோவில் பகுதியில் மதுக்கடைக்கு வரும் மதுபிரியர்கள் மது அருந்தி விட்டு வந்து படுத்துக்கொள்ளும் சம்பவங்களும் நடந்ததால் கோவிலின் பின்புற வாசல் மூடப்பட்டு பல மாதங்கள் ஆகிறது. கோவில் சுவர் முழுவதும் மதுபான பாட்டில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.

இதுபோன்ற நிலையால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் மதுபானக்கடையை மூடக்கோரி, டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலையில் அந்த மதுக்கடையை முற்றுகையிட்டு, கடையை மூடக்கோரி போராட்டம் நடத்தினர்.

பொதுமக்களின் இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஓமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தணிகாசலம், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இது குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.

இதையடுத்து சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த முற்றுகை போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com