பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது

வால்பாறையில் உள்ள சந்தையில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் சமூக இடைவெளியை மறந்து திரண்டதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது
Published on

வால்பாறை

வால்பாறையில் உள்ள சந்தையில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் சமூக இடைவெளியை மறந்து திரண்டதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

நகராட்சி சந்தை

மலைப்பிரதேசமான வால்பாறையில் ஏராளமான எஸ்டேட் பகுதிகள் உள்ளன. இங்கு கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் ஊரடங்கு நேரத்தில் அத்தியா வசிய தேவை இல்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் வால்பாறையில் உள்ள நகராட்சி மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சந்தை நடைபெறும்.

வால்பாறை மற்றும் எஸ்டேட் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இந்த சந்தைக்கு வந்து தேவையான பொருட்களை வாங்கிச்செல்கிறார்கள்.

கூட்டம் அலைமோதியது

முழு ஊரடங்கு காரணமாக கடந்த 2 வாரங்களாக இந்த சந்தை செயல்படவில்லை. இந்த நிலையில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் சந்தை நடந்தது.

சந்தைக்கு ஏராளமான காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் விற்பனைக்காக வந்து இருந்தன. இந்த பொருட்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது..

2 வாரங்களுக்கு பிறகு சந்தை நடந்ததால், பொதுமக்கள் பலர் திரண்டு கூட்டமாக நின்று பொருட்களை வாங்கிச்சென்றனர். இதன் காரணமாக சமூக இடைவெளி என்பது மறந்துபோனது.

இதனால் இங்கு மீண்டும் கொரோனா பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

பரவ வாய்ப்பு

வால்பாறை பகுதியில் இதுவரை 333 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கை காரணமாக தற்போது பரவல் குறைந்து உள்ளது.

இந்த நிலையில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் இப்படி சமூக இடைவெளியை மறந்து கூட்டமாக நின்றால் கண்டிப்பாக கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது.

இந்த நிலை நீடித்தால் மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கை அனைத்தும் வீணாக போய்விடும். சந்தைக்கு சென்று பொருட்கள் வாங்குவது நமக்கு அத்தியாவசிய தேவைதான்.

இந்த கொரோனா பரவல் காலத்தில் சமூக இடைவெளியை கடைபிடித்து, முறையாக முகக்கவசம் அணிந்து இருந்தால் கொரோனா பரவாது.

பொதுமக்கள் ஒத்துழைப்பு

எனவே மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும்.

எனவே பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடும்போது சமூக இடைவெளியை கடைபிடித்து கொரோனா பரவுவதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com