குளத்தை தூர்வார கோரி பொதுமக்கள் மனு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் கொடுத்தனர்

கிருஷ்ணராயபுரம் அருகே குளத்தை தூர்வார கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
குளத்தை தூர்வார கோரி பொதுமக்கள் மனு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் கொடுத்தனர்
Published on

கரூர்,

கரூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் கலெக்டரிடம் கிருஷ்ணராயபுரம் அருகே கோவக்குளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர். அதில், தங்கள் பகுதியில் உள்ள குளம் கடந்த 15 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் கிடக்கிறது. இதனால் குளத்தில் புதர் மண்டி உள்ளது. ஆக்கிரமிப்பும் செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணராய புரம் பகுதியில் சேகரிக்கப் படும் குப்பைகள் குளத்திற்குள் கொட்டப்படுகிறது. இதனால் தண்ணீர் மாசுபடுகிறது. எனவே குளத்தை தூர்வாரி மதகுகளை சரி செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

இதேபோல ராயனூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் அரசு கேபிள் டி.வி. இணைப்பை இருட்டடிப்பு செய்து விட்டு தனியார் கேபிள் டி.வி. இணைப்பை கட்டாயப்படுத்தி ஒளிபரப்பி வரும் ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கூறியிருந்தனர்.

சாமானிய மக்கள் நலக்கட்சி, ஆதித்தமிழர் பேரவை, சுயாட்சி இயக்கம், அமராவதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடந்த மைதானத்தில் மூடப்பட்ட திருமாநிலையூர் பாசன வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

கரூர் சின்னஆண்டாங்கோவில் அம்மன் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், தங்கள் பகுதியில் சாக்கடை கழிவு தேங்கியிருப்பதால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளதாகவும், சாக்கடை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தண்ணீர் தட்டுப்பாட்டை தடுக்க சீராக குடிநீர் வினியோகிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.

இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு கொடுத்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர் கோவிந்தராஜ் அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து கூட்டத்தில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு மடக்கு சக்கர நாற்காலிகள், மனவளர்ச்சி குன்றிய 3 சிறப்பு பள்ளிகளுக்கு தலா ரூ.21,900 மதிப்பிலான கையடக்க கணினிகள் மற்றும் விலையில்லா வீட்டுமனை பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு கலெக்டர் கோவிந்தராஜ் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

நெல்லையில் கந்து வட்டி கொடுமையால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்த சம்பவத்தால் கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடந்த வாரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் ஒரு கதவு மூடப்பட்டும், மனு கொடுக்க வந்தவர்களை போலீசார் பலத்த சோதனை செய்தும் அனுப்பினர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு வாகனமும் நிறுத்தப்பட்டிருந்தது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். ஒவ்வொரு குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் இதே கூடுதல் பாதுகாப்பு தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில் கூட்டரங்கில் கலெக்டர் மனு பெற்றுக்கொண்டிருந்தபோது அந்த இடத்தில் போலீசார் இல்லை. கூட்டரங்கின் வெளிப்பகுதியில் போலீசார் 2 பேர் பணியில் இருப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று பணியில் இருந்த போலீசார் அந்த இடத்தில் இல்லாததால் போலீசாரை உடனே அழைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட கலெக்டர் கோவிந்தராஜ் கூறினார்.

இதையடுத்து 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட போலீசாரை கலெக்டரே நேரிடையாக அழைத்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் வேன் நிறுத்தப்பட்டிருக்கும். இந்த நிலையில் நேற்று 108 ஆம்புலன்ஸ் வேன் இல்லாமல் இருந்தது. திங்கட்கிழமை தோறும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆம்புலன்ஸ் வேன் இருக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com