வீதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் மனு கலெக்டரிடம் கொடுத்தனர்

திருவப்பூர் சவுராஷ்டிரா கீழ் வீதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றக்கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
வீதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் மனு கலெக்டரிடம் கொடுத்தனர்
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார். அப்போது விலையில்லா வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், காவல்துறை நடவடிக்கை, வேலைவாய்ப்பு, பசுமைவீடு, சாலைவசதி, குடிநீர் வசதி, முதியோர் உதவித்தொகை, ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 331 மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு வழங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து கூட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதிர்வு தொகைக்கான காசோலைகள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு கலெக்டர் கணேஷ் வழங்கினார்.

ஆடுகளை கண்டுபிடித்து தரக்கோரி...

கூட்டத்தில், ஆவுடையார்கோவில் தாலுகா ஏம்பல் பகுதியை சேர்ந்த காயாம்பு மனைவி தங்கம் கொடுத்த மனுவில், எனக்கு தமிழக அரசு 4 விலையில்லா ஆடுகள் வழங்கியது. இந்த 4 ஆடுகளும் கடந்த 4-ந் தேதி காணாமல் போய்விட்டது. இதைத்தொடர்ந்து இது குறித்து நான் ஏம்பல் போலீசில் புகார் கொடுத்தேன். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் இதுவரை எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது குறித்து உடனடியாக கலெக்டர் நடவடிக்கை எடுத்து காணாமல்போன எனது ஆடுகளை கண்டுபிடித்து கொடுக்க வழிவகை செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

தொற்று நோய் பரவும் அபாயம்

கூட்டத்தில் புதுக்கோட்டை நகர தி.மு.க. செயலாளர் நைனாமுகமது, பொதுமக்கள் சார்பில் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை நகரம் திருவப்பூர் சவுராஷ்டிரா கீழ் வீதியில் சுமார் 200 வீடுகள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் நகராட்சிக்கு முறையான வரி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக கழிவுநீர் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி உள்ளது.

இதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி அந்த பகுதியில் உள்ள மக்களை கடிப்பதால், அவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் இதுவரை எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இது குறித்து கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சவுராஷ்டிரா கீழ் வீதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும். மேலும் கழிவுநீர் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் கணேஷ் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 17 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு வழங்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com