

இப்படி கார்த்திக்கின் திறமைகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம். அந்த பட்டியலில் ஆட்டிசம் குறைபாட்டையும் நிவர்த்தி செய்துவிட்டார், கார்த்திக்கின் அம்மா ராஜேஸ்வரி. அதுபற்றி மேலும் பேசியவர்...
மழலை பருவத்தில் அவனுக்கு இருந்த ஆட்டிசம் குறைபாடுகள் குறித்து உடனடியாக தெரிந்து கொள்ள முடியவில்லை. இரண்டரை வயதான போது தான் அவனிடம் பேசும் குறைபாடு இருப்பதையும், உணர்வுகளை புரிந்து கொள்ள தடுமாறுவதையும் கண்டுபிடித்தோம். தற்போதெல்லாம் இதுபோன்ற குறைபாடுகள் ஒன்றரை வயதிலேயே கண்டுபிடிக்கப்பட்டுவிடுகிறது. இதன் மூலம் அந்த குழந்தைகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்க முடியும். ஆனால் அன்று அப்படி இல்லை. கார்த்தியின் உடல்மொழியை வைத்துதான், அவனுடைய தேவைகளை பூர்த்தி செய்தோம். ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பது பெரும் சவாலான விஷயம். அந்த சவாலை, கார்த்தியின் பாட்டி ராதா ஏற்றுக்கொண்டார். அவர்தான் கார்த்தியை பெரும்பாடுபட்டு சாப்பிடவைத்தவர். இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் இட்லி, தோசை, பொங்கல், சோறு, ரசம், காய்கறிகள், ஜூஸ்... உள்ளிட்டவற்றை சாப்பிட ஆரம்பித்திருக்கிறான். அந்தளவிற்கு அவனுக்கு உணவு ஊட்டுவது கடினமான விஷயமாகவே இருந்தது என்று கார்த்தியின் முன்கதை சொல்பவர், ஆட்டிசம் பாதிப்புக்கு மத்தியில் அவன் பாடி அசத்திய கதையை கூறினார்.
ஐந்து வயதிலிருந்தே அவனது இசை ஞானம் வளர ஆரம்பித்துவிட்டது. அவனது பாட்டி பி.சுசீலாவின் பாடல்களை விரும்பி கேட்பார். அதனால் கார்த்திக்கிற்கும் பி.சுசீலாவின் பாடல்கள் அத்துபடி ஆனது. அந்த டியூன்களை கேட்டுவிட்டு அதனை குரல் மூலம் வெளிப்படுத்த முயற்சிப்பான். இதனால் அவனுக்கு முறைப்படி இசை கற்றுக்கொடுக்க ஆசைப்பட்டோம். அவன் ஹைபர் ஆக்டிவாக இருப்பதால் அவனுக்கு ஏற்ற வகையில் குரு கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில் துபாயில் கிரிஜா என்பவரை சந்தித்தோம். எனினும் சூழ்நிலையின் காரணமாக நிலையான குருவை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. பலரது வழிகாட்டுதலில் கார்த்தி இசை பயில ஆரம்பித்தான். ஒருசிலர் பத்து நாட்களுக்கு சொல்லிக்கொடுப்பார்கள். அதற்குள் அவர்களுக்கு வேறு இடத்தில் பணி கிடைத்து விடும். அதனால் இசை வகுப்புகளை நிறுத்திவிட்டு கிளம்பிவிடுவார்கள். இப்படியே நாட்கள் நகர்ந்ததால், அவனை முழுமையாக புரிந்து கொள்ளக்கூடிய ஆசிரியர் இல்லாமல் மிகவும் திணறினோம். பின்னர் மெகபூப் அலி என்பவர் மூலம் இசையை முறையாக கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவர் ஆட்டிசம் பாதித்த கார்த்தியை அசத்தலான பாடகராக மாற்றினார். அதுமட்டுமின்றி கிட்டார், கீபோர்டு, டிரம்ஸ் உள்ளிட்ட இசை கருவிகளையும் இசைக்க கற்றுக்கொடுத்தார். அவனது விடாமுயற்சி... இன்று அங்கீகாரமாக மாறிவிட்டது. பலமேடைகளில் பாடி அசத்துகிறான். அதீத நினைவும், ஞாபக சக்தியும் இருப்பதால் திரைப்பட பாடல்களை குறிப்புகள் இல்லாமலேயே பாடி அசத்துகிறான். தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி, பஞ்சாபி மற்றும் அரபிய பாடல்களும் கார்த்தியின் பிளே லிஸ்டில் இருக்கின்றன. 8 மொழி பாடல்களை உச்சரிப்பு பிழையின்றியும், அடிப்பிறழாமலும் பாடி அசத்துகிறான் என்று பெருமைப்படும் ராஜேஸ்வரி, ஆட்டிசம் பாதிப்பிலும் அசத்தலாம் என்பதை என்னுடைய மகன் நிரூபித்திருக்கிறான் என்று அழுத்தமாக முடித்தார்.
இரட்டையர்களாக பிறந்த கார்த்திக்கிற்கு, விக்னேஷ் குமார் என்ற சகோதரர் இருக்கிறார். அவர் கனடாவில் படிக்க, கார்த்திக் பெற்றோருடன் துபாயில் வசிக்கிறார். துபாயில் இருக்கும் இந்திய துணை தூதரகத்தில் நடைபெறும் விழாக் களில், கார்த்திக்கின் இசை பாடல்கள் சத்தமாக கேட்கின்றன. அதுமட்டுமின்றி, பல பள்ளிகளிலும் பாடி அசத்துகிறார். இவரது பாடல்களுக்கு பலதரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம், ஸ்ரீனிவாஸ் மற்றும் பிரபல நடிகர்களின் பாராட்டுகளை பெற்றிருக்கும் கார்த்திக், அவர்களை இசை மழையிலும் நனைத்திருக்கிறார்.
குழந்தைகளை ஆட்டிசம் பாதித்தால் என்ன?, அதற்காக அவர்களை ஒதுக்கிவிடவேண்டுமா?, இதுபோன்ற சிறப்பு குழந்தைகளை பரிதாபமாக பார்ப்பதை விட்டுவிடுங்கள். ஏனெனில் அவர்களுக்குள்ளும் தனித்திறமைகள் இருக்கிறது. ஆட்டிசம் பாதித்தாலும், அவர்கள் அசத்துவார்கள் என்று அழுத்தமாக கூறி விடைபெறுகிறார், கார்த்திக்கின் தந்தை கிருஷ்ணமூர்த்தி.