

காமநாயக்கன்பாளையம்,
விவசாய விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் நெடுஞ்சாலை வழியாக மின் கேபிள் பதித்து மின்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள். மேலும், அதிகாரிகள் தரப்பில் விவசாயிகளிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு விவசாயிகள் ஒப்புக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல் உள்பட 8 மாவட்டங்களில் கடந்த 17-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்லடம் அருகே உள்ள வே.கள்ளிப்பாளையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் கொங்கு ராஜாமணி தலைமையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் கொங்கு ராஜாமணி, புஷ்பநாதன், பழனிச்சாமி, சிவக்குமார் உள்ளிட்ட விவசாயிகள் உடல்நிலை பாதிக்கப்பட்ட மயங்கி விழுந்தனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து நேற்று 7-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி நேற்று போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். அவர் பேசும் போது, விவசாயிகளின் நியாயமான கோரிக்கை நிச்சயம் வெற்றி பெறும். உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு உள்ளவர்கள் தங்கள் உடல் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும். விவசாயிகளை வஞ்சிக்கும் எந்த அரசும் நிலைத்தது இல்லை. உங்கள் போராட்டம் வெற்றி அடையும் என்றார்.
இதற்கிடையே உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ராசு என்ற சுப்பிரமணி(45), நாச்சிமுத்து(41) ஆகிய 2 பேரும் மயங்கி விழுந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே விவசாயிகள் அவர்கள் 2 பேரையும் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கிடையே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் விளை நிலங்களின் வழியாக உயர்மின்கோபுரம் அமைப்பதற்கு எதிராக கோஷமிட்டனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் கொங்கு ராஜாமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
கேரளாவை போன்று தமிழகத்திலும் சாலையோரம் கேபிள் மூலம் மின்சார பாதை அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறோம். போராட்டம் 13 நாட்களாக நடைபெற்ற போதிலும் இதுவரை அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. எங்கள் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுநாள் வரை மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தைக்கு விவசாயிகளை அழைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.
தமிழக மின்துறை அமைச்சர் விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொண்டோம். இது சம்பந்தமாக அரசு தரப்பில் எங்களுக்கு எந்தவிதமான அழைப்பும் வரவில்லை. எனவே தமிழக மின்துறை அமைச்சர், பவர் கிரிட் நிறுவனம் கொண்ட ஒரு முத்தரப்பு கமிட்டி அமைத்து பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தால் அதில் கலந்து கொள்ள தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.