

ஆம்பூர்,
ஆம்பூர் துத்திப்பட்டு பழையமனை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் பாலாஜி (வயது 12), தேவலாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற அவன் மாலையில் வீடு திரும்பினான். பின்னர் நண்பர்களுடன் அருகில் உள்ள பாலாற்றில் குளிக்க சென்றான். அப்போது அவன் தண்ணீரில் மூழ்கிவிட்டான்.
இதனை அவனுடன் சென்றவர்கள் கவனிக்கவில்லை. இந்த நிலையில் அவர்கள் குளித்து முடிந்ததும் வீடு திரும்பிவிட்டனர். ஆனால் பாலாஜி மட்டும் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் பெற்றோர், உறவினர்கள் பாலாற்று பகுதிக்கு வந்தனர். அவர்கள் தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் பாலாஜியை தேடினர். அப்போது அவனது சட்டை மட்டும் அங்கு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் உடனடியாக ஆம்பூர் தீயணைப்பு நிலையத்திற்கும், உமராபாத் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தீயணைப்பு படையினரும், போலீசாரும் விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இரவு நேரம் ஆகிவிட்டதால் மீட்பு பணியை கைவிட்டு நேற்று காலையில் தேட ஆரம்பித்தனர். இந்த நிலையில் பாலாஜியை அவர்கள் பிணமாக மீட்டனர். இது குறித்து உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.