ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி அரசு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி அரசு பள்ளியை முற்றுகையிட்டு மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி அரசு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்
Published on

அரசூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே மணக்குப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மணக்குப்பம் மற்றும் சுற்றியுள்ள இளந்துரை, மேட்டுக்குப்பம், துலுக்கப்பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் 5 ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால் ஒரு தலைமை ஆசிரியரும், மற்றொரு ஆசிரியரும் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இவர்களும் அவசர தேவைக்கு விடுமுறை எடுத்துக்கொண்டாலோ அல்லது அலுவல் சம்பந்தமாக ஏதேனும் கூட்டத்திற்கு சென்று விட்டாலோ அன்றைய தினம் பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.

எனவே ஆசிரியர் பற்றாக்குறையை போக்கக்கோரி மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பினர். இருப்பினும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மாணவ- மாணவிகளின் கல்வி பாதிக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் ஆத்திரமடைந்த மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் நேற்று காலை 9.30 மணியளவில் அந்த பள்ளிக்கு திரண்டு சென்று தங்கள் பிள்ளைகளை வகுப்பறையில் இருந்து வெளியே வரவழைத்தனர். தொடர்ந்து, அந்த பள்ளியின் நுழைவுவாயிலை முற்றுகையிட்டு மாணவ- மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரியும், பள்ளியில் குடிநீர், கழிவறை வசதியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர், சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சம்பந்தப்பட்ட கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் பேசி விரைவில் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்ற அவர்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் மாணவ- மாணவிகள் அனைவரும் காலை 10.30 மணியளவில் வகுப்பறைக்குள் சென்றனர். இந்த திடீர் போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com