

ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூரில் டாஸ்மாக் குடோன் உள்ளது. இங்கிருந்து நேற்று காலை மதுபாட்டில்களை ஏற்றிய டெம்போ சானல் கரையோர பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றது. அதை ராஜாக்கமங்கலத்தை சேர்ந்த அருண் (வயது40) என்பவர் ஓட்டினார்.
கடைக்கு செல்வதற்காக அருண் டெம்போவை திருப்பும் போது, அவரது கட்டுப்பாட்டை இழந்த டெம்போ வெளிசுற்றுச்சுவர் அருகில் உள்ள மரத்தில் மோதி மது பாட்டில்களுடன் கவிழ்ந்தது. இதனால் அதில் மதுபாட்டில்கள் இருந்த அட்டை பெட்டியும் கீழே விழுந்தன. ஆனால் டிரைவர் காயமின்றி தப்பினார்.
ரூ.10 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள்
டெம்போவில் செண்பகராமன்புதூர் கடைக்கு மட்டுமல்லாமல் சுவாமியார் மடம் பகுதியில் உள்ள கடைக்கும் சேர்த்து, மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் ஏற்றப்பட்டு இருந்தது.
இந்த விபத்தில் ஒவ்வொரு அட்டை பெட்டியிலும் 4 முதல் 5 மதுபாட்டில்கள் உடைந்து இருந்தன. இவ்வாறு ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் உடைந்தன. இந்த விபத்து டாஸ்மாக் கடை அருகே நடந்ததால், உடனே கடை ஊழியர்கள் ஓடி வந்தனர். இதனால் மதுபாட்டில்களை வெளியாட்கள் யாரும் எடுத்து செல்லாமல் தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உடனே வேறு டெம்போ வரவழைக்கப்பட்டு, அதில் மதுபாட்டில்களை ஏற்றி சுவாமியார் மடத்துக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.