

திண்டுக்கல்,
திண்டுக்கல் பாறைக்குளம் என்.எஸ்.கே. நகரை சேர்ந்தவர் கருப்பையா (வயது 38). சுமை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி ஆரோக்கியம்மாள் (36). இவர்களுடைய மகன்கள் மாசிலாமணி (15), ஆறுமுகம் (14). இருவரும் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முறையே 10, 9-ம் வகுப்பு படிக்கின்றனர். கருப்பையா வசிக்கும் வீட்டின் முன்பகுதியில் துணிகளை காயப்போடுவதற்காக இரும்பு கம்பி மூலம் கொடி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கொடியின் அருகில் உள்ள மின்சார பெட்டியில் அவருடைய வீட்டின் மின் இணைப்புக்கான வயரும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலையில் கருப்பையா வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டார். மாசிலாமணி பக்கத்து தெருவில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டான். ஆறுமுகம் தூங்கிக்கொண்டிருந்தான்.
கணவர் வேலைக்கு கிளம்புவதை பார்த்த ஆரோக்கியம்மாளுக்கு, அவர் அணிந்து செல்லும் ஆடைகள் கொடியில் காயப்போட்டது நினைவுக்கு வந்தது. உடனே அதை எடுப்பதற்காக சென்ற ஆரோக்கியம்மாள் கொடியில் கையை வைத்தார். அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. மேலும் மின் அழுத்தம் காரணமாக கொடி கம்பியைவிட்டு அவர் கையை எடுக்க முடியவில்லை. இதனால் அவர் கொடிக்கம்பியை பிடித்தபடி சிலை போல் நின்றார்.
இதற்கிடையே தூக்கத்தில் இருந்து எழுந்த ஆறுமுகமும், கருப்பையாவும் அங்கு வந்தனர். அப்போது தான் ஆரோக்கியம்மாள் மீது மின்சாரம் பாய்ந்தது அவர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரை கீழே தள்ளிவிட்டு காப்பாற்ற முயன்றனர். அப்போது அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் இருவரும் தூக்கிவீசப்பட்டனர்.
இதில் படுகாயமடைந்த அவர்கள் வலியால் அலறித்துடித்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், மின் இணைப்பை துண்டித்து ஆரோக்கியம்மாளை மீட்டனர். பின்னர் 3 பேரையும் ஆட்டோ மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். ஆனால் வழியிலேயே ஆரோக்கியம்மாள் பரிதாபமாக இறந்தார்.
கருப்பையாவுக்கும், ஆறு முகத்துக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொடியில் மின்சாரம் எப்படி பாய்ந்தது?. மின்சார வயரில் சேதம் ஏற்பட்டு கொடிக்கம்பியில் பட்டதால் இந்த சம்பவம் நடந்ததா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து பெண் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.