பஸ் கட்டண உயர்வின் பயன் அரசு போக்குவரத்து கழகத்திற்கு கிடைக்கவில்லை

பஸ் கட்டண உயர்வின் பயன் அரசு போக்குவரத்து கழகத்திற்கு கிடைக்கவில்லை என்று ஏ.ஐ.டி.யு.சி. தொழிலாளர் சம்மேளன பொதுச்செயலாளர் லட்சுமணன் தர்மபுரியில் கூறினார்.
பஸ் கட்டண உயர்வின் பயன் அரசு போக்குவரத்து கழகத்திற்கு கிடைக்கவில்லை
Published on

தர்மபுரி,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் சம்மேளனத்தின் (ஏ.ஐ.டி.யு.சி.) நிர்வாகக்குழு கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சம்மேளன மாநில தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். சம்மேளன பொதுச் செயலாளர் லட்சுமணன், மாநில நிர்வாகிகள் சுப்பிரமணியன், நந்தாசிங், கஜேந்திரன், ஏ.ஐ.டி.யு.சி. தர்மபுரி மாவட்ட செயலாளர் மணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். கூட்டத்தில் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் லட்சுமணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 23 ஆயிரம் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 7 லட்சம் கி.மீ. தூரம் அல்லது 8 ஆண்டுகள் இயக்கப்பட்ட பஸ்களை மாற்றி புதிய பஸ்களை இயக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் அந்த விதிமுறையை மீறி தமிழகத்தில் சுமார் 16 ஆயிரம் பழைய அரசு பஸ்கள் காலாவதியான பின்பும் இயக்கப்படுகின்றன. சாலை விபத்துகள் அதிகரிப்பதற்கு இதுவும் முக்கிய காரணம். எனவே காலாவதியான அரசு பஸ்களை இயக்குவதை நிறுத்த வேண்டும்.

பஸ் கட்டண உயர்வாலும், பெரும்பாலான அரசு பஸ்கள் விரைவு பஸ் என்ற வகைபாட்டிற்கு மாற்றப்பட்டதாலும் அரசு பஸ்களில் நாள்தோறும் சென்றுவரும் பயணிகளின் மொத்த எண்ணிக்கையில் 30 லட்சம் அளவிற்கு குறைந்து உள்ளது. போதிய அளவில் வசூல் இல்லை என்ற காரணத்தால் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான வழித்தடங்களில் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த பிரச்சினைகளால் பஸ் கட்டண உயர்வின் பயன் அரசு போக்குவரத்து கழகத்திற்கு கிடைக்கவில்லை.

போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினைகளும் தீரவில்லை. பொதுமக்களின் சொத்தான அரசு போக்குவரத்து கழகத்தையும், போக்குவரத்து கழக தொழிலாளர்களையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com