காலிபணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்

தமிழகத்தில் காலிபணி யிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று சுகாதார ஆய்வாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காலிபணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்
Published on

நாகப்பட்டினம்,

தமிழக சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நாகையை அடுத்த பாப்பாகோவிலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் கருணாமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் அருணகிரி முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் மோகன் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

தமிழகத்தில் பொது சுகாதார துறையில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட காலிபணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். பல்நோக்கு சுகாதார பணியாளர் என்ற பெயரினை ரத்து செய்து, சுகாதார ஆய்வாளர் என்று பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்லூரி மற்றும் நிறுவனங்களில் சுகாதார ஆய்வாளர் பயிற்சி பெற்று வருபவர்களை டெங்கு களப்பணியில் ஈடுபடுத்த உத்தரவிட வேண்டும்.

அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் சுகாதார ஆய்வாளர்களே பிறப்பு-இறப்பு சான்று வழங்குவதற்கு ஆணை பிறப்பிக்க வேண்டும். சுகாதார ஆய்வாளர்களுக்கு மாதாந்திர சில்லறை செலவினமாக ரூ.2 ஆயிரமும், பிறப்பு-இறப்பு பதிவு செய்யவும், அறிக்கை அனுப்பவும், பணிகள் துரிதமாக நடைபெறவும் மடிக்கணினி வழங்க வேண்டும். சுகாதார ஆய்வாளர்களை மாற்று பணிகளில் ஈடுபடுத்தும் போது 15 நாட்களுக்கு மிகாமல் மாற்று பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாநில துணை தலைவர் மணி, மாநில துணை பொதுச்செயலாளர் மாசாணன், மாநில தலைமை நிலைய செயலாளர் முருகபெருமாள், மாநில அமைப்பு செயலாளர் குணசேகரன், சங்க ஆலோசகர் சீனிவாசன், மாநில பிரசார செயலாளர்கள் உதயகுமாரன், அர்த்தனாரி, மாநில இணை செயலாளர்கள் அய்யப்பன், செல்வக்குமார், நாராயணசாமி, மாநில மகளிரணி செயலாளர்கள் கீதா, சாந்தி, ரேணுகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com