நீட் தேர்வு விவகாரத்தில் “அரசியல் தலைவர்கள் கருத்துக்களை நம்பி மாணவர்கள் ஏமாற வேண்டாம்” - முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

“நீட் தேர்வு விவகாரத்தில் அரசியல் தலைவர்களின் கருத்துக்களை நம்பி மாணவர்கள் ஏமாற வேண்டாம்“ என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
நீட் தேர்வு விவகாரத்தில் “அரசியல் தலைவர்கள் கருத்துக்களை நம்பி மாணவர்கள் ஏமாற வேண்டாம்” - முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி
Published on

தூத்துக்குடி,

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழா சேவா வாரமாக ஒரு வாரம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் சங்கர ராமேசுவரர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து ஆதரவற்றோர் இல்லங்களில் காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. பின்னர் தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே 70 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு பா.ஜனதா கட்சி கொடி ஏற்றப்பட்டது. அங்கு ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட வணிகர் பிரிவு செயலாளர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கொடிக்கம்ப கல்வெட்டை திறந்து வைத்தார். தொடர்ந்து ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா நாடு முழுவதும் நாளை (அதாவது இன்று) கொண்டாடப்படுகிறது. அதனுடைய முன்னோட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 71 அடி உயர கொடி கம்பம் நடப்பட்டு பா.ஜனதா கட்சியின் கொடி ஏற்றப்பட்டு உள்ளது.

நீட் தேர்வுக்கு அச்சப்பட்டோ, ஏதோ ஒரு காரணத்துக்காகவும் நம்முடைய குழந்தைகளில் சிலர் தற்கொலை செய்து இருப்பது மிகவும் வருத்தத்துக்கு உரியது. அதே நேரத்தில் ஒவ்வொரு குழந்தைகளும் இந்த நாட்டினுடைய கண்கள். அந்த குழந்தைகளுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையிலும், ஊக்கம் அளிக்கும் வகையிலும் எந்த தலைவராக இருந்தாலும், அரசியல் கட்சித் தலைவராக இருந்தாலும், அதை நோக்கித்தான் அவர்களின் பார்வை இருக்க வேண்டும். அதனை விடுத்து பிணம் எங்கே விழுகிறது என்று தேடி அலையும் கழுகுகளை போல அரசியல் தலைவர்கள், கட்சிகள் இருக்கக் கூடாது என்பது என் கருத்து. நீட் தேர்வை கொரோனா காலத்தில் மட்டும் தள்ளி வைத்தால் சரி செய்து விடலாம் என்பது ஒப்புக்காக கூறுவதுதான்.

தேர்வு எழுதி உள்ள பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் எந்த குறையும் கூறவில்லை. அரசியல் கட்சி தலைவர்களுக்கு இடையே தான் குழப்பம். அந்த குழப்பம் நீட் பற்றிய குழப்பம் அல்ல. 2021-ம் ஆண்டு வரக்கூடிய சட்டமன்ற தேர்தல் குறித்த குழப்பம் தான். என்ன பேச வேண்டும் என்றே தெரியவில்லை. நீட் தேர்வு விவகாரத்தில் அவர்களின் கருத்துக்களை நம்பி மாணவர்கள் ஏமாற வேண்டாம்.

மூன்று தலைமுறையாக அதே அரசியலை நடத்த வந்துள்ளனர். இதைப்பற்றி மாணவர்கள் கவலைப்பட வேண்டாம். மாணவர்கள் துணிச்சலோடு தைரியத்தோடு உலகுக்கு சவால் விடக்கூடிய வகையில், ஒரு தமிழ் மாணவன் திகழுவான் என்பதை நடத்தி காட்டுங்கள். சட்டமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் தமிழகத்தின் பிரச்சினைகளை முன் வைத்தார்கள் என்றால் பயன்பெற முடியும். இல்லை என்றால் அவர்களது முக கவசத்துக்கு பதிலாக முழுக்க மூடிக் கொள்வது சரியாக இருக்கும். பயனற்ற சட்டமன்ற உறுப்பினராக அவர்களில் பலர் சட்டமன்றம் செல்வதில் என்ன பயன் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் வணிகர் பிரிவு மாவட்ட தலைவர் நாராயணன், மாநில செயலாளர் சத்தியசீலன், மாவட்ட செயலாளர்கள் பழனிவேல், ஆறுமுகம், பாலா பொய் சொன்னான், வர்த்தக அணி மாநில தலைவர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com